தாய்மார்களின் சுமையை குறைக்கும் விதமாக காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்


தாய்மார்களின் சுமையை குறைக்கும் விதமாக காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்
x

தாய்மார்களின் சுமையை குறைக்கும் விதமாக காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற காலை உணவு திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை

தாய்மார்களின் சுமையை குறைக்கும் விதமாக காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற காலை உணவு திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

காலை உணவு திட்டம்

திருவண்ணாமலை ஒன்றியம் கொளக்குடி ஊராட்சி அம்மன் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். சி.என்.அண்ணாதுரை எம்.பி., கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திராவிட மாடல் என்னும் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்படும் என்று 7.5.2022 அன்று அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக இத்திட்டத்தை மதுரையில் அவர் தொடங்கினார். அதில் 1545 பள்ளிகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 92 மாணவர்கள் பயன் அடைந்தனர்.

இந்த திட்டத்தை கூடுதலாக அப்போதே தொடங்கி இருக்கலாம். ஆனால் அப்போது நம்மிடம் போதுமான நிதியில்லை. முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் நம் மாநிலத்தை ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடனில் விட்டு சென்றார்கள். இதற்கு மட்டும் மாதம் ரூ.48 ஆயிரம் கோடி வட்டி தமிழக அரசு செலுத்தி வருகிறது.

சுமையை குறைக்கும் விதமாக...

இதையெல்லாம் சமாளித்து தற்போது இத்திட்டத்தை விரிவுப்படுத்தி செயல்படுத்தி உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள், 2 நகராட்சிகளில் உள்ள 1552 பள்ளிகளை சேர்ந்த 87 ஆயிரத்து 842 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

தமிழக முதல்- அமைச்சர் இத்திட்டத்தை தாய்மார்களின் சுமையை குறைக்கும் விதமாக அறிவித்து உள்ளார். தாயுள்ளம் கொண்ட முதல்- அமைச்சர் கருணை உள்ளதோடு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

இத்திட்டத்தில் உணவு சுவையாக இருக்க வேண்டும். கடமையாக இருக்க கூடாது. உணவின் தரம் குறையக் கூடாது. உணவு சுவையாக இருக்க வேண்டும் என்று யோசித்து மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைத்து உள்ளார்.

அதனால் முதல்-அமைச்சரின் எண்ணத்தை வெற்றியடைய செய்ய வேண்டும். இன்றைக்கு பெரும்பாலான சாதனையாளர்கள் தமிழ் வழி அரசு பள்ளியில் படித்தவர்கள்.

கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகின்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணைத்தலைவர் கம்பன், தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ஊராட்சி உதவி இயக்குனர் சரண்யாதேவி, உதவி கலெக்டர் மந்தாகினி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமணன், திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் பிரித்திவிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாச்சலம், தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், ஆணையாளர் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், திருவண்ணாமலை மத்திய ஒன்றிய செயலாளர் மெய்யூர் ந.சந்திரன், தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் பெ.கோவிந்தன், அருணை கன்ஸ்ட்ரக்ஷன் துரை.வெங்கட், மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரவணன், கொளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் உஷா சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story