அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்காணொலி காட்சி மூலம் முதல்- அமைச்சர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அன்னதானம் வழங்கும் திட்டம்
தமிழக சட்டசபையில் 2022-23-ம் ஆண்டின் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கடந்த மே மாதம் நடந்தது. அப்போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் குளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தவுடன் பக்தர்களுக்கு உணவு பரிமாறுவதை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
60 பணியாளர்கள்
இது குறித்து கோவில் அலுவலர்கள் கூறுகையில், ''நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமான காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் செலவில் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இந்த நாள் முழுவதும் அன்னதான பணிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் சமையல், பரிமாறுதல் போன்றவற்றிக்காக 60 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்'' என்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, மாநில கைப்பந்து சங்க துணைத் தலைவர் தலைவர் ஸ்ரீதரன், மாவட்ட மூத்தோர் தடகள சங்கத் தலைவர் கார்த்திவேல்மாறன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் கே.வி.சேகரன், திருவண்ணாமலை நகர மன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன், திருவண்ணாமலை ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி உள்பட கோவில் பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.