முதல்-அமைச்சரின் சிறப்பு சாலைகள் அமைக்கும் திட்டப்பணி விரைவில் தொடங்கும்
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு சாலைகள் அமைக்கும் திட்டப்பணி விரைவில் தொடங்கும் என்று ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தெரிவித்தார்.
பொறையாறு:
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு சாலைகள் அமைக்கும் திட்டப்பணி விரைவில் தொடங்கும் என்று ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தெரிவித்தார்.
ஒன்றியக்குழு கூட்டம்
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், தலைவர்
நந்தினி ஸ்ரீதர் தலைமையில் கூட்ட அரங்கில் நடந்தது. ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
தேவிகா:- இலுப்பூர் சிவன் கோவில் ஹரிஹரன் கூடல் பெருமாள் கோவில் ஆகிய குளங்களை தூர்வாரி படித்துறை அமைக்க வேண்டும். மற்றும் ஹரிஹரன் கூடல் நடுநிலை பள்ளி வகுப்பறையின் மேற்கூரையை சீரமைக்க வேண்டும்.
விளையாட்டு மைதானம்
கிருஷ்ணன்:- பரசலூர் ஊராட்சி திருவள்ளுவர் தெரு, நக்கீரர் தெரு அண்ணாமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைத்து தர வேண்டும். பரசலூர் ஊராட்சியில் பாரதப் பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2001-2002-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்ட 6 வீடுகள் முழுமை பெறாமல் உள்ளது. பரசலூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும்.
லெனின்தாஸ்:- டி.மணல்மேடு அரசு பள்ளி எதிரே ஆபத்தான வகையில் திறந்து கிடக்கும் மழைநீர் வடிகாலில் மேல் மூடி அமைக்க வேண்டும். மைதிலி மகேந்திரன்:- மேமாத்தூர் பஸ் நிறுத்த கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும். வாழ்க்கை கிராமத்தில் மினி குடிநீர் தொட்டியை புதிதாக அமைத்து தர வேண்டும்.ஜெயந்தி:- திருவிடைக்கழி -தில்லையாடி இடையே பூச்சாத்தனூர் கிராமத்தில் இணைப்பு பாலம் சேதமடைந்து உள்ளது. அந்த பாலத்தை புதிதாக கட்டித்தர வேண்டும்.
விரைவில் தொடங்கப்படும்
இதனை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர்
பேசுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சிறப்பு சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லாடை, விளாகம் சாலை, ஆக்கூர்,கருவேலி சாலை, செம்பனார்கோவில் மேலப்பாதி சாலை, தில்லையாடி வள்ளியம்மை நகர் மெயின்ரோடு, ஆறுபாதி மேலகரம் சாலை, காலமநல்லூர்தட்ட சங்கேந்தி சாலை, மாமாக்குடி வடகட்டளை தென்கட்டளை சாலை என ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் புதிதாக சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும். இதேபோல் அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலர்கள், சுகாதார துறையினர் உள்பட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.