தடுப்பு கம்பியில் தலை சிக்கிய குழந்தை


தடுப்பு கம்பியில் தலை சிக்கிய  குழந்தை
x

கும்பகோணத்தில் தடுப்பு கம்பியில் தலை சிக்கிய 1½ வயது குழந்தையை லாவகமாக வாலிபர் மீட்டார்.

தஞ்சாவூர்

கும்பகோணம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் மெயின் ரோட்டில் இரண்டு தளங்களைக்கொண்ட ஒரு மாடி வீடு உள்ளது. இதில் இரண்டாவது தளத்தில் விஜய் ஆனந்த்-கீர்த்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1½ வயதில் ஹரிப்பிரியன் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இவர்களது வீட்டின் மேல் பகுதியில் உள்ள தடுப்பு கம்பிகளின் அருகில் குழந்தை ஹரிபபி்ரியன் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பது வழக்கம். அதோடு மட்டுமல்லாமல் ரோட்டில் செல்பவர்களை பார்த்து குழந்தை ஹரிப்ரியன் கையசைத்து டாட்டா காட்டுவான்.

தடுப்பு கம்பியில் தலை சிக்கியது

நேற்று காலை ஹரிப்பிரியன் வழக்கம்போல் தடுப்பு கம்பிகளின் அருகில் நின்று இருந்தான். அப்போது அந்த வழியாக சென்றவர்களுக்கு டாட்டா காட்டியபோது ஆர்வத்தில் தடுப்புக் கம்பியில் தலையை விட்டுள்ளான். ஒருசில வினாடிகளுக்குப் பிறகு கம்பியின் வெளிப்பகுதிக்கு வந்த தலை உள் பகுதிக்கு இழுக்க முடியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் குழந்தை தவித்து கூச்சலிட்டு உள்ளான்.

பெற்றோர் தவிப்பு

குழந்தை அழும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் வீட்டுக்குள் இருந்து வெளியில் ஓடி வந்து தடுப்பு கம்பிக்குள் சிக்கிக்கொண்ட தங்களது குழந்தையின் தலையை எடுக்க முயற்சி செய்தனர். நீண்ட நேரம் முயற்சி செய்தும் குழந்தையின் தலையை தடுப்பு கம்பிக்குள் இருந்து அவர்களால் வெளியில் எடுக்க முடியவில்லை. இதனால் விஜய் ஆனந்த்-கீர்த்திகா தம்பதியினர் செய்வதறியாமல் தவித்து கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் கூடியது.

லாவகமாக மீட்ட வாலிபர்

அப்போது அந்த வழியாக சென்ற தனியார் நிறுவன ஊழியர் ஜவஹர், குழந்தை மற்றும் பெற்றோரின் கூச்சலை கேட்டு மாடிப்பகுதிக்கு விரைந்து வந்தார். பின்னர் அவர், குழந்தையின் தலை சிக்கிய இருபக்க இரும்பு கம்பிகளை தனது கையால் இழுத்து வளைத்து குழந்தை ஹரி பிரியனின் தலையை லாவகமாக வெளியே எடுத்து பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்தார். அதுவரை கதறி அழுத குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்க தனது குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டனர்.

பொதுமக்கள் பாராட்டு

சரியான நேரத்தில் அங்கு வந்த வாலிபர் ஜவஹர், மிகுந்த துணிச்சலுடனும், சாதுர்யமாகவும் கம்பியை வளைத்து குழந்தையை லாவகமாக மீட்டதை பார்த்த குழந்தையின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






Next Story