கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதனையொட்டி சிறப்பு திருப்பலியுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது.
சாம்பல் புதன்
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில், ஜெபம், தவம், தர்மம் செய்து தம்மை சீர்படுத்தி கொள்வதனால் இதனை மனமாற்றத்தின் காலம் என்று கூறுவர். பொதுவாக தவக்காலம், சாம்பல் புதன் திருச்சடங்குகளுடன் தொடங்குவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டின் தவக்காலம் நேற்றைய நாளான சாம்பல் புதனன்று தொடங்கியது. இதையொட்டி திண்டுக்கல் மணிக்கூண்டு புனித வளனார் பேராலயத்தில் ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதனை ஆயரின் செயலர் இளங்கோ, வட்டார அதிபர் மரிய இஞ்ஞாசி, பாதிரியார்கள் இணைந்து நிறைவேற்றினர். இதில் ஆயர், பாதிரியார்கள் அனைவருடைய நெற்றியிலும் சாம்பலை பூசினார்.
மாலையில் திருப்பலி மற்றும் திருச்சிலுவை பவனி நடைபெற்று பேராலய வளாகத்தில் திருச்சிலுவை நடப்பட்டது. அதேபோல் திண்டுக்கல் மேட்டுப்பட்டி, முத்தழகுபட்டி, ராமையன்பட்டி உள்பட திண்டுக்கல் மறைமாவட்டத்தின் அனைத்து பங்கு தேவாலயங்களிலும் சாம்பல் புதனையொட்டி சிறப்பு திருப்பலி அந்தந்த பங்குதந்தையர்கள் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனைவரின் நெற்றியிலும் பாதிரியார்கள் சாம்பலை பூசி திருச்சடங்கை நிறைவேற்றினர்.
செந்துறை
செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தையர்கள் இன்னாசிமுத்து, பிரிட்டோ, மரிய பிரான்சிஸ் பிரிட்டோ ஆகியோர் சிறப்பு திருப்பலியை நடத்தினர். பின்னர் தவக்காலம் தொடங்குவதற்கு அடையாளமான சாம்பல் பூசுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
வத்தலக்குண்டு அருகே சின்னுபட்டியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் பங்குத்தந்தை பால்ராஜ் தலைமையிலும், வத்தலக்குண்டு புனித தோமையார் தேவாலயத்தில் பங்குத்தந்தை எட்வின்ராஜ் தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடந்தது. மரியாயிபட்டி, மேலகோவில்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துெகாண்டனர்.
இந்த தவக்கால முடிவில், வருகிற ஏப்ரல் மாதம் 7-ந்தேதி புனித வெள்ளியும், 9-ந்தேதி இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவும், ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.