தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
x

தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் கல்வி விடுதிகளில் தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்து உள்ளார்.

தென்காசி

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மை பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு ரூ.3 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் 10 ஆண்களும், 8 பெண்களும் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 1-7-2022 அன்று எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 18 முதல் 37 வயது வரையும், பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி. மற்றும் டி.என்.சி. பிரிவினருக்கு 18 முதல் 34 வயது வரையும், இதர பிரிவினருக்கு 18 முதல் 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

இந்த தகுதிகளுடன் தென்காசி மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் பகுதிநேர தூய்மை பணியாளராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் மாதிரி விண்ணப்ப படிவத்தை https://tenkasi.nic.in/notice-category/recruitment என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் நகல்களை இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், ரயில்நகர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தென்காசி-627811 என்ற முகவரியில் வருகிற 20-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது மேலும் காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story