மலைவாழ் மக்களிடம் கலெக்டர் குறைகள் கேட்டார்
மலைவாழ் மக்களிடம் கலெக்டர் கார்மேகம் குறைகள் கேட்டார்.
வளர்ச்சி திட்டப்பணிகள்
ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கணவாய்புதூர், கண்ணப்பாடி, பூமரத்தூர், டேனிஷ்பேட்டை, செட்டிபட்டி, கோவில்பாடி ஆகிய கிராம பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மலைவாழ் மக்களுக்கு அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மலைக்கிராம பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அடிப்படை வசதிகள்
அதன்படி மலைவாழ் மக்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலை, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், இப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் வளர்ச்சித்திட்டப்பணிகள் நேரடியாக மலைவாழ் மக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக மலைவாழ் மக்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தரமாக வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் கணவாய்புதூரில் இருந்து கண்ணப்பாடி வழியாக ஏற்காடு வரை செல்லும் மலைச்சாலை அதே போன்று பூமரத்தூரில் இருந்து பொம்மிடி வரை செல்லும் மலைச்சாலைகள், வனத்துறைக்கு உட்பட்ட காப்புக்காட்டு பகுதிகளில் செல்வதால் வனத்துறை மூலம் அனுமதி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மலைவாழ் மக்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மாவட்ட வன அலுவலர் கவுதம், உதவி கலெக்டர் தணிகாசலம், தாசில்தார் தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.