மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்த கலெக்டர்


மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்த கலெக்டர்
x

ஆதியூர், எலவம்பட்டி ஊராட்சிகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரடியாக சென்று மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

திருப்பத்தூர்

ஆதியூர், எலவம்பட்டி ஊராட்சிகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரடியாக சென்று மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

குறைகளை கேட்டார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆதியூர் ஊராட்சியில் ஒரே குடும்பத்தில் 3 மாற்றுத் திறனாளிகளாக உள்ளவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது ஓய்வூதியம் வருகிறதா, தங்களுக்கு சொந்த வீடு உள்ளதா என்ன தொழில் செய்கிறீர்கள் எனக் கேட்டு அறிந்தார். மேலும் தங்களுக்கு கடனுதவி கொடுத்தால் தொழிலை விரிவுபடுத்த முடியுமா என கேட்டறிந்தார்,

இதேபோல் அந்த பகுதிகளில் உள்ள குடிசை வீட்டு பகுதிகளில் நேரடியாக உள்ளே சென்று தங்களுக்கு பட்டா இருக்கிறதா இல்லை என்றால் உடனடியாக விண்ணப்பிக்கவும் அரசு வீடு வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என கூறினார்.

குடிசை வீட்டில் சாப்பிட்டாா்

குடிசை வீட்டில் என்ன சமையல் செய்தீர்கள்? எடுத்து வாருங்கள் என கூறி சாப்பிட்டு பார்த்தார், இதேபோல் அந்த பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளுக்கு நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டரை பொதுமக்கள் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு நேரில் அழைத்துச் சென்று காட்டினார்கள். உடனடியாக இதனை சீரமைக்க ஊராட்சிகள் உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் அங்கிருந்த பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு வாருங்கள் என ஒவ்வொருவராக வந்து அழைத்துக் கொண்டே இருந்தனர். அதற்கு தற்போது நேரம் இல்லை பிறகு ஒருநாள் முழுவதும் இந்த பகுதிக்கு வருகிறேன் என்று கூறி ஆதியூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் நேரில் சென்று சான்றிதழ்களை ஆய்வு செய்தார்,

பஸ் வசதி

பின்னர் எலவம்பட்டி ஊராட்சிக்கு சென்று அங்கு மாற்றுத் திறனாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இந்த பகுதிக்கு பஸ் வருவதில்லை. சுமார் 2 கிலோமீட்டர் மெயின் ரோடு சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. ஊருக்குள் பஸ் வசதி செய்து தர வேண்டும் என கூறினார்கள்.

எலவம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் 50 பேர் பல ஆண்டுகளாக வாழ்ந்து உள்ளோம். எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதேபோல் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, வருவாய் ஆய்வாளர் சிவா, கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை ஆனந்தகுமார், விவேகானந்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story