கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்


கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்
x

திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் முருகேஷ் தேசிய கொடியை ஏற்றினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் முருகேஷ் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அவர் ரூ.1 கோடியே 80 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சுதந்திர தின விழா

இந்திய நாட்டின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாப்பட்டது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர் திறந்தவெளி வாகனத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுடன் போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிட்டார்.

தொடர்ந்து போலீசார் மற்றும் சாரணர் இயக்கத்தினரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக் கொண்டார். தியாகிகளின் குடும்பத்தினரை அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று கவுரவித்தார்.

நாய்களின் சாகச நிகழ்ச்சி

முன்னதாக சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்கள் மற்றும் தேசிய கொடி நிற பலூன்களை பறக்கவிட்டார். தொடர்ந்து காவல் துறையில் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது காவல்துறையில் உள்ள மோப்ப நாய்கள் போலீசாருக்கு எவ்வாறு பயன் உள்ளதாக பணியாற்றுகிறது என்பது குறித்தும், காவல் துறையில் மோப்ப நாய்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்ப்பித்தனர்.

தொடர்ந்து பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்கள் தேசப்பற்றை ஊக்குவிக்கும் பாடல்களுக்கு நடனமாடினர்.

வீர விளையாட்டு, பண்பாட்டை பிரதிபலிக்கும் கலைகள் குறித்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி இருந்தது. மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

நலத்திட்ட உதவிகள்

இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை உள்பட பல்வேறு அரசு துறை சார்பில் மொத்தம் 191 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 80 லட்சத்து 32 ஆயிரத்து 846 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து கலெக்டர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 592 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், மாவட்ட தடகள சங்க தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story