கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியினை கலெக்டர் முருகேஷ் ஏற்றினார்.
திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியினை கலெக்டர் முருகேஷ் ஏற்றினார். தொடர்ந்து அவர் பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்துக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
குடியரசு தின விழா
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து அவர் திறந்தவெளி வாகனத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுடன் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களை பறக்கவிட்டனர். மேலும் தேசிய கொடி நிறத்திலான பலூன்களும் பறக்கவிடப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.
இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நடனம், யோகா போன்றவற்றின் மூலம் இந்தியாவின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் வெளிக்காட்டினர். இது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நலத்திட்ட உதவி
பின்னர் ஊரக வளர்ச்சி துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வேளாண்மை துறை, தொழில்மையம், தாட்கோ உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 34 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்து 16 ஆயிரத்து 449 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 50 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தனித்திறமையாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு என 408 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
இதையடுத்து கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீர்பிரதாப்சிங், பயிற்சி கலெக்டர் லட்சுமிராணி, உதவி கலெக்டர்கள் அனாமியா, மந்தாகினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் உள்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
காந்தி சிலை
தொடர்ந்து திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.