வேலூர் கோட்டையில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்


வேலூர் கோட்டையில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
x

வேலூர் கோட்டை கொத்தளம், நேதாஜி விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

வேலூர்

சுதந்திர தினவிழா

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தினவிழாவிற்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்களை பறக்க விட்டார்.

அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு ஏற்று கொண்டனர். இதையடுத்து கலெக்டர் வேலூர் மாவட்டத்தில் சாராய விற்பனையை கட்டுப்படுத்தியதற்காக போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு கேடயம் மற்றும் சிறப்பாக பணிபுரியும் 67 போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

நலத்திட்ட உதவிகள்

அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை, மாநகராட்சி, பொதுப்பணித்துறை, சித்த மருத்துவம், கால்நடை பராமரிப்புத்துறை, போக்குவரத்துத்துறை உள்பட 19 அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள், ஊழியர்கள் 316 பேருக்கு கேடயம், பாராட்டு சான்றிதழையும், பல்வேறு துறைகளின் சார்பில் 14 பயனாளிகள் மற்றும் 3 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.92 லட்சத்து 43 ஆயிரத்து 556 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கலெக்டர் கவுரவித்தார். விழாவில் 9 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறந்த கலைநிகழ்ச்சிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோட்டை கொத்தளம்

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா, வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பிரசன்னகுமார், உதவி கலெக்டர் கவிதா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சுதந்திர தினவிழாவிற்கு வந்தவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே விளையாட்டு அரங்கின் உள்ளே செல்ல அனுமதித்தனர்.

முன்னதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வேலூர் கோட்டையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

வேலூர் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கும், மக்கான் சிக்னல் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கும், வேலூர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சுதந்திர போராட்டவீரர் சத்தியமூர்த்தி சிலைக்கும் கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாநகராட்சி அலுவலகம்

அதேபோல் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. மண்டலக்குழு தலைவர்கள் நரேந்திரன், யூசுப்கான், வெங்கடேசன், கமிஷனர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் சுஜாதா தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். விழாவில் மாநகராட்சி கவுன்சிலர்கள், உதவி கமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி செயலாளர் வேதநாயகம் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் ஊராட்சி கண்காணிப்பாளர் புஷ்பா, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story