பணி ஓய்வுபெற்ற தபேதாரை தனது காரில் வழியனுப்பி கவுரவித்த கலெக்டர்
பணி ஓய்வுபெற்ற தபேதாரை தனது காரில் கலெக்டர் வழியனுப்பி கவுரவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமுவின் தபேதாராக பணியாற்றி வந்தவர் அன்பழகன். இவர் நேற்று முன்தினத்துடன் பணி ஓய்வு பெற்றார். இவர் பல ஆண்டுகளாக தபேதாராக புதுக்கோட்டையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பணி ஓய்வு பெற்ற அவரை கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் வைத்து கலெக்டர் கவிதாராமு சால்வை அணிவித்தும், சந்தன மாலை அணிவித்தும் கவுரவித்தார். அதன்பின் பணியில் இருந்து ஓய்வு பெற்ற தபேதார் அன்பழகனை, அவரது வீட்டிற்கு தனது காரில் கலெக்டர் கவிதாராமு வழியனுப்ப ஏற்பாடு செய்தார். அப்போது தனது காரின் கதவை கலெக்டர் திறந்து, காரில் முன்பக்கம் தான் அமரும் இருக்கையில் அவரை அமர வைத்து கவுரவித்தார். காரின் பின் இருக்கையில் கலெக்டர் அமர்ந்தார். அடப்பன் வயலில் உள்ள வீட்டில் அன்பழகன் இறக்கி விடப்பட்டார். அங்கு அவரது வீட்டில் கலெக்டர் கவிதா ராமு பரிசு பொருட்கள் வழங்கி, விருந்தில் பங்கேற்றார். அப்போது கலெக்டரின் கணவர் ராகுலும் உடன் இருந்தார். இந்த நிலையில் கலெக்டரின் காரில் தபேதார் வழியனுப்பி வைக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் நேற்று வைரலானது. தபேதாரை கலெக்டர் கவுரவித்த நிகழ்வு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது.