1,000 மரக்கன்று நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
வாணியம்பாடியை அடுத்த தெக்குப்பட்டு கிராமத்தில் 1,000 மரக்கன்று நடும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.
வாணியம்பாடியை அடுத்த தெக்குப்பட்டு கிராமத்தில் 1,000 மரக்கன்று நடும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
வாணியம்பாடி அருகே நாட்டறம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார். அப்போது தெக்குப்பட்டு கிராமத்தில் மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை, கலெக்டர் மரக்கன்று நட்டு தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து மல்லங்குப்பம் ஊராட்சி அழகுமந்திரிவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் நீர் வரத்து கால்வாய் சீரமைப்பு பணியையும், ராமநாயக்கன்பேட்டை ஊராட்சியில் ரூ.7. லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் நடைபெறும் நீர் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வு
தொடர்ந்து ராமநாயக்கன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.5¼ லட்சம் மதிப்பில் நடைபெறும் சமுதாய பொது கழிவறை கட்டுமான பணியை பார்வையிட்டார். இதேபோல், ராமநாயக்கன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர் அறை, பிரசவ அறை, பிரசவத்திற்கு பின் கவனிப்பு அறை, காத்திருப்பு அறை உள்ளிட்ட அறைகளை பார்வையிட்டார்.
மல்லங்குப்பம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் நூலக கட்டிட புனரமைப்பு பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரகலா, ரகுகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.