தாமதமாக வந்த அரசு அதிகாரிகளை கூட்ட அரங்கிற்கு வெளியே நிறுத்திய கலெக்டர்


தாமதமாக வந்த அரசு அதிகாரிகளை கூட்ட அரங்கிற்கு வெளியே நிறுத்திய கலெக்டர்
x

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்கு தாமதமாக வந்த அரசு அதிகாரிகள் கூட்ட அரங்கிற்கு வெளியே நிறுத்தப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள், துறைசார்ந்த அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண்பதற்கு வசதியாக எந்ததெந்த துறைகளில் அதிக அளவில் மனுக்கள் வருகிறது.

அதனை எவ்வாறு தீர்க்கலாம், எந்தெந்த துறைகளை இணைந்து தீர்வு காணலாம் என்பது குறித்து ஆலோசனை செய்வதற்காக அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக்கூட்டம், பொதுமக்களின் குறைதீர்வு கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக காலை 9 மணிக்கு நடத்தப்படும் என்றும், இதில் அனைத்துத்துறை அதிகாரிகளும் சரியான நேரத்திற்கு குறைதீர்வு கூட்டரங்கிற்கு வர வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கதவுகள் மூடல்

அதன்படி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து சரியாக காலை 8.50 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர் அவர் குறைதீர்வு கூட்டரங்கிற்கு சென்றார். அப்போது அங்கு ஒரு சில அலுவலர்களே அமர்ந்திருந்தனர். பெரும்பாலான நாற்காலிகள் காலியாகவே இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலெக்டர் அதிகாரிகள், துறை அலுவலர்கள் வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தார்.

ஆனால் யாரும் வருவதாக தெரியவில்லை. இதனால் கோபம் அடைந்த அவர் 9.15 மணிக்கு கூட்ட அரங்கு கதவுகளை மூடும்படியும், தாமதமாக வரும் அலுவலர்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் எனவும் பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கூட்ட அரங்கின் அனைத்து கதவுகளும் உடனடியாக மூடப்பட்டது. உள்ளே கலெக்டர் மற்றும் சில அலுவலர்கள் மட்டுமே இருந்தனர்.

வெளியே நிறுத்தம்

சிறிது நேரம் கழித்து ஒவ்வொரு அதிகாரிகளாக கூட்டத்துக்கு வந்தனர். ஆனால் கூட்ட அரங்கின் கதவு மூடப்பட்டிருப்பதும், நேரத்துக்கு வராததால் அரசு அதிகாரிகளை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என கலெக்டர் கூறிய தகவலை அறிந்து அரசு அதிகாரிகள் பெரும் பதற்றத்துடன் நுழைவு வாயில் அருகே சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து காலதாமதமாக வந்த அரசு அலுவலர்களை அழைத்து, இனி யாரும் காலதாமதமாக கூட்டத்துக்கு வரக்கூடாது. அப்படி வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துவிட்டு அனைவரும் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் தவறாமல் சரியான நேரத்திற்கு வரவேண்டும என எச்சரித்து விட்டு தனது அலுவலகத்திற்கு சென்றார்.

இதனால் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்களை போன்று...

பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்களை வெளியே நிறுத்தி தண்டனை வழங்கும் ஆசிரியர்களை போல, கலெக்டர் தலைமையில் நடைபெற இருந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்கு கால தாமதமாக வந்த அரசு அலுவலர்களை வெளியே நிறுத்திய கலெக்டரின் செயலால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கலெக்டரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை நேற்று மாவட்ட முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது


Next Story