அரசு பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
பொன்னேரி பகுதியில் உள்ள அரசு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை
பொன்னேரி பகுதியில் உள்ள அரசு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரசு பூங்கா
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சி ஏலகிரிமலை அடிவாரத்தில் அரசு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளது.
சுமார் ரூ.35 லட்சம் நிதியில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
ஆனால் அவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி பூங்காவின் சுற்றுச்சூழல் இடிந்து சுகாதாரமற்ற சூழலிலும், உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது.
இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி மாவட்ட கலெக்டரிடம் அறிவுறுத்தி இருந்தார்.
கலெக்டர் ஆய்வு
அதன்பேரில் கலெக்டர் அமர் குஷ்வாஹா, தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தும், குப்பைகள் சூழ்ந்தும், உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி உபகரணங்கள் உடைந்தும் இருந்தது. மேலும் கழிவறைகள், குடிநீர் வசதி, மின்விளக்குகள் போன்றவை இல்லாமல் கிடந்தது.
இதனையடுத்து கலெக்டர் அமர்குஷ்வாஹா ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரனிடம் அரசு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தில் அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பயன்பெறும் வகையில் பூங்காவில் கேண்டீன் ஒன்றும் அமைத்து பூங்காவின் பாதுகாப்பிற்கு கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட்டுள்ளார்.
மகிழ்ச்சி
சமூகவிரோதிகளின் கூடாரமாக இருந்த அரசு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி புது பொலிவுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவள்ளதால் அப்பகுதி மக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆய்வின்போது ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யாசதீஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா ஜெகன், பொன்னேரி ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி அருள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.