கடலில் ராட்சத பாறையை படகில் சென்று பார்வையிட்ட கலெக்டர்


கடலில் ராட்சத பாறையை படகில் சென்று பார்வையிட்ட கலெக்டர்
x

மீன் பிடிப்பதற்கு இடையூறாக இருப்பதாக மீனவர்கள் கூறியதை தொடர்ந்து கடலில் ராட்சத பாறையை படகில் சென்று கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டார்

திருநெல்வேலி

கூடங்குளம்:

மீன் பிடிப்பதற்கு இடையூறாக இருப்பதாக மீனவர்கள் கூறியதை தொடர்ந்து கடலில் ராட்சத பாறையை படகில் சென்று கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டார்.

மீனவர் தினம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இடிந்தகரை கிராமத்தில் மீனவர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மீன்வள உதவி இயக்குனர் மோகன்குமார், ராதாபுரம் மீனவர் சங்க கூட்டமைப்பு தலைவர் சரோஜ் குமார், இடிந்தகரை பஞ்சாயத்து தலைவர் சகாயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பல்வேறு ேபாட்டிகளும் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இடிந்தகரை கிராம இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக இடிந்தகரை வளர்ச்சி குழு கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி மீனவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குத்தந்தை சதீஷ்குமார், ரவி ஸ்டண்ட், சைமன் ஆகியோர் செய்து இருந்தனர்.

படகில் சென்ற கலெக்டர்

தொடர்ந்து கலெக்டர் விஷ்ணுவிடம் மீனவர்கள் ஒரு புகார் தெரிவித்தனர். அதாவது இந்த பகுதியில் உள்ள கடலில் ஒரு பெரிய ராட்சத பாறை இருக்கிறது. மீன்பிடிக்கும் போது இந்த பாறை இடையூறாக உள்ளது. எனவே அதனை அகற்றி தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கலெக்டர் விஷ்ணு படகில் கடலில் சென்று அந்த பாறையை பார்வையிட்டார். இதுதொடர்பாக வல்லுனர்கள் மூலம் கலந்து ஆலோசித்து இந்த பாறையை ஆய்வு செய்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.


Next Story