மாணவர்களுக்கு சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டு பார்த்த கலெக்டர்
சானானந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சமைத்து வைத்திருந்த உணவை கலெக்டர் முருகேஷ் சாப்பிட்டு பார்த்தார்.
சானானந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சமைத்து வைத்திருந்த உணவை கலெக்டர் முருகேஷ் சாப்பிட்டு பார்த்தார்.
கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலையை அடுத்த சானானந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் 40 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்படும் வட்டார நாற்றங்கால் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியினை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு மரக்கன்றுகள் நடும் பணி மற்றும் தீவன புல் வளர்ப்பு பணியை தொடங்கி வைத்தார். இங்கு வளர்க்கப்படும் மரக்கன்றுகளை அரசு பள்ளிகளுக்கு வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் மாவட்டத்திலேயே முன்மாதிரி வட்டார நாற்றங்கால் பராமரிப்பாக (நர்சரியாக) இருக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
உணவு சாப்பிட்ட கலெக்டர்
அதைத் தொடர்ந்து தூய்மை பாரத இயக்கம் மூலம் இயங்கும் நெகிழி கழிவு மேலாண்மை செய்யும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த நெகிழியை பிரித்தெடுக்கும் எந்திரத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.
பின்னர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் முருகேஷ் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி திறன் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சத்துணவு கூடத்தை பார்வையிட்டு, அங்கு மாணவர்களுக்கு வழங்குவதற்காக சமைத்து வைத்திருந்த உணவினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (தணிக்கை) கருணாநிதி, ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜயலட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.