பாம்பு ஏற்படுத்திய பரபரப்பு
தி.மு.க. விழா நடந்த இடத்தில் பாம்பு பரபரப்பு ஏற்படுத்தியது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை திருச்சி காட்டூரில் உள்ள அரசு பள்ளியில் நடந்த வானவில் மன்றம் தொடக்க விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் சஞ்சீவிநகர் அருகே 70 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றினார். முன்னதாக முதல்-அமைச்சரின் வருகையையொட்டி அங்கு கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். போலீசாரும் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முதல்-அமைச்சர் வருவதற்கு சிறிதுநேரத்துக்கு முன்பு சஞ்சீவிநகர் பகுதியில் சாக்கடை வாய்க்கால் ஓரத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஊர்ந்து சென்றதை கண்டனர். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் அரியமங்கலத்தை சேர்ந்த மோகன் என்ற பாம்பு பிடிக்கும் நபர் மூலம் அந்த பாம்பை பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.