கிராமசபை கூட்டத்தை புறக்கணிக்க முயன்ற மக்களால் பரபரப்பு


கிராமசபை கூட்டத்தை புறக்கணிக்க முயன்ற மக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே கிராமசபை கூட்டத்தை புறக்கணிக்க முயன்ற கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே கிராமசபை கூட்டத்தை புறக்கணிக்க முயன்ற கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

குற்றச்சாட்டு

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் குத்தப்பாஞ்சன் ஊராட்சியில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு மேலகுத்தபாஞ்சான் கிராமத்தை தலைமையாக கொண்டு கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய செல்ல வேண்டியுள்ளது எனவும், அந்த கிராமத்திற்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால் நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்படுகிறது எனவும், பரும்பு நகர், குறிஞ்சி நகர், நேரு நகர், காளாத்திமடம், ஆணையப்பபுரம், குத்தலிங்கபுரம், அருணாச்சலபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

மேலும் நடந்து முடிந்த முந்தைய கிராம சபை கூட்டங்களில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பொதுமக்களின் வேண்டுகோலுக்கு இணங்க காளாத்திமடம் கிராமத்தில் அலுவலகம் இயங்க வேண்டும் என்று பல்வேறு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அவ்வாறு இயங்கவில்லை.

இந்தநிலையில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெறவிருந்தது. இதையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி 7 ஊர் கிராமமக்கள் சார்பாக எதிர்ப்பு சுவரொட்டி ஊர் முழுக்க ஒட்டப்பட்டது. மேலும் பரும்பு நகரில் நடக்கவிருந்த கிராம சபை கூட்டத்தினை கிராம மக்கள் புறக்கணித்தனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த உதவி இயக்குனர் (கி.ஊ) பிரான்சிஸ், ஊராட்சி ஒன்றிய தலைவர் திவ்யா மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகராஜ், பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் வாரத்தில் 3 நாட்கள் கிராம நிர்வாக அலுவலகம் காளாத்திமடம் கிராமத்தில் இயங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் தற்காலிக கிராம நிர்வாக அலுவலகம் இயங்கும் என்று உறுதியளித்தனர்.

முற்றுகை

இதற்கிடையில் தங்களது ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் காளத்திமடம் கிராமத்தில் நிரந்தரமாக செயல்பட போகிறதாக எண்ணி, மேலகுத்தபாஞ்சன் கிராம மக்கள் அங்கு சென்ற பஞ்சாயத்து தலைவி ஜெயராணி குமாரை முற்றுகையிட்டனர். அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதுக்குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

சமாதான கூட்டம்

பேச்சுவார்த்தையில் அனைத்து கிராம மக்களும் நாளை (இன்று) தாசில்தார் அலுவலகத்தில் வைத்து சமாதான கூட்டம் நடத்தி முடிவு எடுத்து கொள்ளலாம் என்று உறுதியாளித்தனர்.

அதன்பேரில் பஞ்சாயத்து தலைவி ஜெயராணி குமாரை கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்தனர். தொடர்ந்து பரும்பு நகரில் வைத்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story