மாநகராட்சி பொறியாளர் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
விபத்தில் இறந்த பிளஸ்-2 மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி திருச்சி மாநகராட்சி பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
விபத்தில் இறந்த பிளஸ்-2 மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி திருச்சி மாநகராட்சி பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
பிளஸ்-2 மாணவி
திருச்சி மேலசிந்தாமணி காவேரி நகரை சேர்ந்தவர் அழகப்பன். கூலித் தொழிலாளி. இவரது மகள் ஜெகஜோதி (வயது 17). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலையில் ஜெகஜோதியை பள்ளிக்கு அனுப்புவதற்காக, அவரது அண்ணன் விஜய்குமார் (22) ஸ்கூட்டரில் அழைத்து சென்றார். சிந்தாமணி பஜார் பகுதியில் சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெகஜோதி பரிதாபமாக இறந்தார்.
முற்றுகை
இந்த நிலையில் விபத்தில் இறந்த மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள மாநகராட்சி கோட்ட இளநிலை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
இதில் சி.ஐ.டி.யு. சங்க மாவட்ட செயலாளர் ரங்கராஜன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொறுப்பாளர் லெனின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பஸ் நிறுத்தத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் திருச்சி கோட்டாட்சியர் பார்த்திபன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி, போலீஸ் துணை கமிஷனர் அன்பு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் விபத்தில் இறந்த மாணவியின் குடும்பத்துக்கு முதல் கட்டமாக பஸ் உரிமையாளர் மற்றும் பாதாள சாக்கடை பணிக்கான ஒப்பந்த நிறுவனத்திடமிருந்து ரூ.4 லட்சம் நிவாரணமாகவும், அந்த மாணவியின் அண்ணன் விஜய்குமாருக்கு மாநகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணி வழங்கவும், 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட சாலையை செப்பனிட்டு தருவதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.