கல்லூரி மாணவிகளை நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டர்
மார்த்தாண்டத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவிகளை நடுவழியில் கண்டக்டர் இறக்கி விட்டார்.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவிகளை நடுவழியில் கண்டக்டர் இறக்கி விட்டார்.
கல்லூரி மாணவிகள்
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 3 மாணவிகள் அழகியமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்கள். அவர்கள் தினமும் மார்த்தாண்டம் மேம்பால பஸ்நிறுத்தத்தில் நின்று நாகர்கோவில் செல்லும் பஸ்சில் ஏறி கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையும் மாணவிகள் 3 பேரும் கல்லூரிக்கு செல்வதற்காக மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பஸ்சிற்காக காத்து நின்றனர். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் ஒரு அரசு பஸ் வந்தது. அதில் ஏறுவதற்காக மூன்று மாணவிகளும் பஸ்சை நிறுத்தும்படி கையை காட்டினர். ஆனால், டிரைவர் பஸ்சை அங்கு நிறுத்தாமல் சிறிது தூரம் தள்ளி நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் ஓடிச் சென்று அந்த பஸ்சில் ஏறிக்கொண்டிருந்தனர். அதற்குள் பஸ்சை டிரைவர் இயக்கவே 3 மாணவிகளும் தடுமாற்றத்துடன் சுதாரித்துக் கொண்டு பஸ்சில் ஏறினர்.
நடுவழியில்...
அதைத்தொடர்ந்து அந்த பஸ்சில் பணியில் இருந்த கண்டக்டர் மாணவிகளிடம் 'இந்த பஸ்சில் எதற்காக ஏற வேண்டும், வேறு பஸ்சில் ஏறவேண்டியதுதானே என்று கூறி வசைபாடி உள்ளார்'. ஆனாலும், மாணவிகள் எதுவும் பேசவில்லை.
இதையடுத்து அந்த மாணவிகள் செல்ல வேண்டிய கல்லூரி பகுதிக்கு தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்காமல் கண்டக்டர் மார்த்தாண்டம் பம்மத்தில் அவர்களை இறக்கிவிட்டுள்ளார். அதனால் ஏமாற்றம் அடைந்த மாணவிகள் வேறு பஸ்சில் ஏறி கல்லூரிக்கு சென்றனர்.
புகார் அளிக்க முடிவு
மாலையில் வீட்டுக்கு வந்த மாணவிகள் இதுபற்றி தங்கள் பெற்றோரிடம் கூறி முறையிட்டு மனவேதனை அடைந்தனர். இதை கேட்டு மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இதுதொடர்பாக போக்குவரத்து உயர் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்போவதாக மாணவிகளின் பெற்றோர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடைேய இதுபோன்ற சில பஸ்கள் மாணவ-மாணவிகள் ஏறுவதை தவிர்ப்பதற்காக நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாகவும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.