அரசு பஸ்சில் இசை கருவியுடன் பயணித்த மாணவியை நடுரோட்டில் இறக்கி விட்ட கண்டக்டர்


அரசு பஸ்சில் இசை கருவியுடன் பயணித்த மாணவியை நடுரோட்டில் இறக்கி விட்ட கண்டக்டர்
x

அரசு பஸ்சில் இசை கருவியுடன் பயணித்த மாணவியை நடுரோட்டில் இறக்கி விட்ட கண்டக்டர்.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கலை விழா நடந்தது. இதில் அந்த கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ரஞ்சிதாவும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் அரசு பஸ்சில் இசை கருவிகளுடன் ஏறி பயணம் செய்தார்.

பஸ் சிறிது தூரம் சென்றதும் மாணவி ரஞ்சிதா கண்டக்டரிடம், தனக்கும், இசைக்கருவிகளுக்கும் சேர்த்து டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது கண்டக்டர், இசைக்கருவிகள் குறித்தும், அவற்றை பஸ்சில் ஏற்றியது தொடர்பாகவும் மாணவியிடம் அவதூறாக பேசி உள்ளார். மேலும் அவருக்கு டிக்கெட் கொடுக்க மறுத்ததுடன், வண்ணார்பேட்டை பகுதியில் கீழே இறக்கிவிட்டு சென்றார்.

இதனால் மாணவி ரஞ்சிதா அங்கு இசைக்கருவிகளுடன் நின்றுக் கொண்டு கதறி அழுதார். தகவலறிந்து வந்த சக மாணவர்கள் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கூறி, சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

பின்னர் அந்த வழியாக மதுரைக்கு வந்த வேறொரு அரசு பஸ்சில் கண்டக்டரிடம் நடந்த விவரம் குறித்து எடுத்துக்கூறி ரஞ்சிதாவை இசைக்கருவிகளுடன் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


Next Story