ஏப்ரல் மாதம் முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம்
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து ஏப்ரல் மாதம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம்பாஷா கூறினார்.
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து ஏப்ரல் மாதம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம்பாஷா கூறினார்.
ஆலோசனை கூட்டம்
தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம்பாஷா தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராஜாதம்பி, மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணசாமி வாண்டையார்(தஞ்சை தெற்கு), லோகநாதன்(தஞ்சை வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், பொருளாளர் பழனியப்பன், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நாகூர்கனி, அமைப்பு செயலாளர் கோவி.மோகன், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி மோகன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு
கூட்டம் முடிந்த பின்னர் அஸ்லம்பாஷா நிருபர்களிடம் கூறியதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மீது ஜனநாயகத்துக்கு விரோதமாக, அரசியல் அமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டு அதில் தண்டனை விதிக்கப்பட்டு அவருடைய எம்.பி. பதவி பறிக்கப்பட்டு உள்ளது.
அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு? என்ன வியாபார தொடர்பு? அதானி நிறுவனத்தில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு வந்து இருக்கிறது? அது எங்கிருந்து வந்திருக்கிறது? அது யாருடைய பணம்?.
ஏப்ரல் மாதம் முழுவதும் போராட்டம்
எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ. போன்ற பொதுத்துறை நிறுவனங்களை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்து எக்கச்சக்கமான நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதை யார் ஏற்பது? மொத்த கடன்சுமை இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகன் தலையிலும் விழுகிறது. இதற்கு பிரதமர் மோடி பொறுப்பு ஏற்பீர்களா? என்பது குறித்து கேள்வி கேட்டார்.
இதற்காக ஏற்கனவே பொய்யாக போடப்பட்ட வழக்கை தூசி தட்டி எழுப்பி, விரைவாக விசாரித்து 2 ஆண்டு சிறை தண்டனை ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்டது. அதில் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்தும் அதற்கு இடம் கொடுக்காமல் 24 மணி நேரத்தில் எம்.பி. பதவியை பறித்து இருக்கிறார்கள்.
ஏப்ரல் மாதம் முழுவதும் போராட்டம்
இது ஜனநாயக படுகொலை, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதனை வன்மையாக கண்டிப்பதோடு, அகில இந்திய காங்கிரஸ் உத்தரவுக்கிணங்க ஏப்ரல் மாதம் முழுவதும் தீவிர போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் மக்கள் ஆதரவை திரட்டுவோம்
இவ்வாறு அவர் கூறினார்.