காங்கிரஸ் கூடாரம் காலியாகி விடும்
ராகுல்காந்தியின் நடைபயணம் முடிவதற்குள் காங்கிரஸ் கூடாரம் காலியாகி விடும் என்று வேலூர் இப்ராகிம் தெரிவித்தார்.
பாரதீய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் வத்தலக்குண்டுவில் நடந்தது. இதற்கு நகர தலைவர் அர்ச்சுன பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தனபால், மாநில கூட்டுறவு பிரிவு பொதுச்செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், நிர்வாகி அழகுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பா.ஜ.க. சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வக்கீல் அணி தலைவர் ராஜா, ஒன்றிய தலைவர் செந்தில்குமார், நிர்வாகி மதுரைவீரன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், வேலூர் இப்ராகிம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பா.ஜ.க. அரசின் திட்டங்கள் 35 சதவீத சிறுபான்மை மக்களை சென்றடைந்துள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பா.ஜ.க. சொன்னது. ஆனால் இன்றைய சூழலில் ராகுல் காந்தியே அதை செய்து வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அவர் நடைபயணம் சென்று முடிப்பதற்குள், காங்கிரஸ் கூடாரம் காலியாகிவிடும் என்று அவரது கட்சியினரே கூறுகின்றனர் என்றார்.