புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
மாயாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலூர்
மாயாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இரும்பு பாலம்
கூடலூரில் இருந்து தெப்பக்காடு வழியாக மாயாற்றை கடந்து மசினகுடிக்கு சாலை செல்கிறது. இதில் மாயாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலம் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இறத்கிடையில் பாலமும் மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாயம் இருந்தது. இதனால் கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் புதிய பாலம் கட்ட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
புதிய பாலம்
இதையடுத்து கடந்த ஆண்டு ஆங்கிலேயர் கால இரும்பு பாலம் உடைத்து அகற்றப்பட்டது. தொடர்ந்து தெப்பக்காடு வன விடுதி வழியாக உள்ள தரைப்பாலம் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. பலத்த மழை பெய்யும் காலத்தில் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தரை பாலத்தில் வாகனங்கள் செல்லும்போது பாதுகாப்பு கருதி போக்குவரத்து அடிக்கடி நிறுத்தப்படும்.
இந்த நிலையில் புதிய பாலம் கட்ட சுமார் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் பாலம் கட்டுவதற்கான பணிகளும் தொடங்கியது.
விரைந்து முடிக்க...
இதற்கிடையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஊட்டியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது தெப்பக்காடு பகுதியில் மாயாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணியை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டார். இருப்பினும் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம்(ஜூன்) மழைக்காலம் தொடங்க உள்ள சூழலில் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓட வாய்ப்புள்ளது. இதனால் தரைப்பாலத்தில் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய பாலம் கட்டுமான பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.