பூங்கா அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும்


பூங்கா அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் பூங்கா அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் பூங்கா அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நகராட்சி கூட்டம்

கூடலூர் நகராட்சி அலுவலக மன்ற அரங்கில் நேற்று நகராட்சி கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், துணைத்தலைவர் சிவராஜ், பொறியாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கவுன்சிலர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

தொடர்ந்து கவுன்சிலர் உஸ்மான்:- நகராட்சி தலைவர், கவுன்சிலர் ஒருவரை தாக்குவது போல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்.

தலைவர் பரிமளா:- உட்கட்சி விவகாரம் அதை மன்றத்தில் பேசக்கூடாது. கவுன்சிலர் ஜெயலிங்கம், உறுப்பினர் மன்றத்துக்கு தேவையில்லாத கருத்துக்களை பேசக்கூடாது.

பூங்கா அமைக்கும் பணி

கவுன்சிலர் வெண்ணிலா:- புதர்கள் வெட்டுவதற்கு நிதி ஒதுக்கிய தீர்மானம் குறித்து கூட்டங்களில் விளக்கம் கேட்டு வருகிறேன். ஆனால், முறையான பதில் வரவில்லை. மன்றத்துக்கு தெரியாமல் தீர்மான பதிவேட்டில் இடம்பெற்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர்:- இதுதொடர்பாக பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் தவறு நடைபெறாத வகையில் பார்த்துக் கொள்ளப்படும்.

கவுன்சிலர் வெண்ணிலா:- கூடலூரில் பூங்கா அமைக்கும் திட்ட பணி குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். கவுன்சிலர் ராஜேந்திரன், பூங்கா அமைக்க 3 இடங்களை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர் என தெரிவித்தார். இதனால் கவுன்சிலர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

விரைவாக மேற்கொள்ள வேண்டும்

துணைத் தலைவர் சிவராஜ்:- கூடலூரில் பூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு திட்டம். அதை அரசியலாக்க வேண்டாம். பெரும்பாலான கவுன்சிலர்கள், பூங்கா அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

கவுன்சிலர் அனூப்கான்:- கூடலூரில் 3-வது குடிநீர் திட்ட பணி எந்த நிலையில் உள்ளது. அதனுடன் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நகராட்சி நிர்வாகத்திற்கு மின் கட்டண செலவை குறைக்க முடியும்.

தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் தெரிவித்தார். கூட்டத்தில் பணி மேற்பார்வையாளர் ஆல்தொரை உள்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story