தடுப்புச்சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
கோத்தகிரி-கன்னேரிமுக்கு சாலையில் தடுப்புச்சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மனு அளித்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு செல்லும் சாலையில், ரூ.1 கோடியே 70 லட்சம் செலவில் 2 இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. ஒரு தடுப்புச்சுவர் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், தொடர் மழை பெய்ததால் மற்றொரு தடுப்புச்சுவர் கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சாலையோர மண் திட்டு இடிந்து விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது குறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து அந்த சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வந்தன. தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மாற்று சாலை வழியாக சென்று வருவதால் நேரம் மற்றும் பெட்ரோல் விரையம் ஏற்பட்டு வருகிறது. மேலும் ராம்சந்த் சதுக்கம் வழியாக அரசு பஸ் உள்பட அனைத்து வாகனங்களும் மாற்று வழியில் இயக்கப்படுகின்றன. எனவே, தடுப்புச்சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் நேற்று கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு சென்று அலுவலர்களிடம் மனு அளித்தனர்.