மோட்டார் சைக்கிள் மோதி சமையல் மாஸ்டர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி சமையல் மாஸ்டர் பலி
அடுக்கம்பாறை
கண்ணமங்கலம் அருகே சின்னசந்தவாசல் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40). இவர் வேலூர் செல்லும் ரோட்டில் கணியம்பாடி அருகே சந்தனக்கொட்டாய் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் 10 ஆண்டுகளாக சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக கம்மவான்பேட்டையில் இருந்து கணியம்பாடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.
மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த கம்மவான்பேட்டையைச் சேர்ந்த செல்வரசனும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியின் மகன் ராஜ்குமார் வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.