கடைகள் ஏலம் விடுவதை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்
கடைகள் ஏலம் விடுவதை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
ஏலம் விட முடிவு
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மற்றும் இன்பென்ட்ரி ரோடு உள்ளிட்ட பகுதியில் மாநகராட்சி சொந்தமான கடைகள் உள்ளன. இதில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இந்த கடைகளுக்கு பொது ஏலம் நடைபெறும் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வேலூர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சண்முகனடியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.வி.எம்.குமார், காய்கறி வணிக சங்க செயலாளர் சங்கர், நகராட்சி வணிகர் சங்க பொருளாளர் சரவணமூர்த்தி, நேதாஜி மார்க்கெட் வணிக சங்க தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
ரத்து செய்ய வேண்டும்
மாநகராட்சி ஏலம் விடுவதாக அறிவித்துள்ள கடைகளுக்கு அதிக வாடகை நிர்ணயம் காரணமாக வியாபாரிகளால் வாடகை செலுத்த முடியாது நிலை உள்ளது. மேலும் இந்த கடைகள் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே மாநகராட்சி இந்த கடைகளுக்கான ஏலத்தை நிறுத்த வேண்டும். கடைகள் ஏலம் விடப்படுவதன் மூலம் வியாபாரிகள் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கும். இது தொடர்பாக கமிஷனரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) வியாபாரிகள் அனைவரும் முறையிட உள்ளோம். அரசாணையின் படி கடைகளின் உரிமம் பெயர் மாற்றம் செய்ய மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக மனு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.