மாநகராட்சி, நகராட்சியில் பணிபுரிபவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்
தேர்தல் வாக்குறுதியின்படி மாநகராட்சி மற்றும் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் மனு அளித்தனர்.
தேர்தல் வாக்குறுதியின்படி மாநகராட்சி மற்றும் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் நுழைவு வாயிலில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கூட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வாக்கடை புருசோத்தமன் தலைமையிலான விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்சாகுபடியின் மகசூல் 120 நாட்கள் கடந்து கிடைக்கும் நெல்மணிகள் சுமார் 30 நாட்களில் அரவைக்கு சென்று அரிசியாக கிடைக்கிறது. அரசின் மூலம் நவீன அரிசி ஆலையில் தரமான அரிசி பெற்று ரேஷன் கடைகளில் நுகர்வோருக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது.
தற்போது செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த அரசின் நோக்கத்தை திசை திருப்ப பிளாஸ்டிக் அரிசி கலப்படம் என ஆதாரமற்ற குற்றசாட்டு, வதந்தி பரப்புவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும்.
மேலும் மனிதநேயத்துடன் வருவாய்த்துறை நோட்டீசு கொடுத்து கதிர் அறுவடை பயிருக்கு வாய்ப்பு அளித்து ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக அவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்புரவு பணியாளர்கள் மனு
திருவண்ணாமலை டாக்டர் அம்பேத்கர் நகராட்சி ஒப்பந்தம் மற்றும் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் நலச்சங்க தலைவர் மலர்வண்ணன் தலைமையிலான துப்புரவு பணியாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களின் நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். பிரதி மாதம் 10-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட மற்றும் வேலையை விட்டு நின்ற ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பி.எப். தொகையினை செலுத்தி பி.எப். கணக்கு முடித்து கொடுக்க வேண்டும்.
2018 முதல் 2023 வரையிலான கிரின்வாரியர் ஒப்பந்த தூய்மை பணியில் பணியாற்றிய தூய்மை தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய பி.எப். தொகையின் செலுத்தி கணக்கை முடித்து கொடுக்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த மற்றும் அடிப்பட்டு உடல் உறுப்புகளை இழந்த தூய்மை தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களுக்கு எதிரான அரசாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியின் படி மாநகராட்சி மற்றும் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு
கீழ்பென்னாத்தூர் தாலுகா சோமாசிபாடி கிராம இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சோமாசிபாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தை தற்போது ஆக்கிரமிப்பு செய்ய முற்படுகிறார்கள்.
சோமாசிபாடி சித்தேரி நீர்பிடிப்புடன் சேர்ந்த விளையாட்டு மைதானத்தை சுமார் 35 வருடங்களாக சீரமைத்து பொது நிகழ்ச்சி மற்றும் இளைஞர் பயன்பாட்டிற்காக கிரிக்கெட், வாலிபால், தடகள போட்டி, உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் அமைக்கப்பட்டும் மற்றும் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பம், கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஊர் பொதுமக்கள் நடை பயிற்சிக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிலரால் நீர்பிடிப்புடன் இணைந்த விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமிப்பு செய்ய வேகமாக முயற்சி நடைபெற்று வருகிறது. எனவே இந்த மைதானத்தை மீட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பாட்டிற்காக வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.