மின் கசிவால் குடிசை வீடு தீயில் எரிந்தது
நாட்டறம்பள்ளி அருகே மின் கசிவால் குடிசை வீடு தீயில் எரிந்தது.
நாட்டறம்பள்ளியை அடுத்த ஏரிக்கோடி அனுமந்தன் தெருவில் குடிசை வீட்டில் வசிப்பவர் மணி (வயது 60). இவர் நெடுஞ்சாலையோரம் சைக்கிளில் இளநீர் விற்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் மணி அருகே உள்ள தென்னை மரத்தில் இளநீர் வெட்ட சென்றார். அவருடைய மனைவி சாந்தி (55) நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அதிகாரை 5.30 மணியளவில் மின் கசிவின் காரணமாக கூரை வீடு தீப்பிடித்து மளமளவென எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எனினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்ததோடு வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கம், வெள்ளி நகை மற்றும் பட்டா, சிட்டா ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் என மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.நல்லவேளையாக கணவன்- மனைவி இருவரும் வெளியே சென்று இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி, வருவாய் ஆய்வாளர் நந்தினி, பேரூராட்சி தலைவர் சசிகலா சூரிய குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் பொருட்களை வழங்கினார்.