தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து நாசம்
வேலூர் அருகே தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.
வேலூர் அருகே தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.
குடிசை வீட்டில் தீ
வேலூரை அடுத்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் சுந்தரம், கூலிதொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுந்தரம் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை 8.30 மணியளவில் ஜெயந்தி வழக்கம்போல் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குடிசை தீப்பற்றி எரிந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வீட்டில் இருந்த மகன்களுடன் வேகமாக வெளியேறினார். சுந்தரம் வேலை தொடர்பாக வெளியே சென்றிருந்தார்.
பின்னர் ஜெயந்தி அக்கம், பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். குடிசையில் தீ மள மளவென்று பற்றி எரிந்ததால் அணைக்க முடியவில்லை. இதுகுறித்து வேலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதனால் வீடு முழுவதும் தீ பரவி மேலும் வேகமாக எரிந்தது.
பொருட்கள் எரிந்து சாம்பல்
சிறிதுநேரத்தில் அங்கு வந்த வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதில், வீட்டில் இருந்த பிரிட்ஜ், டி.வி., துணிமணிகள், கல்விசான்றிதழ்கள், ஆதார்கார்டு, பணம் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின.
இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சமையல் செய்யும்போது குடிசையில் தீப்பற்றி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.