நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தை இடமாற்ற எதிர்ப்பு: 3-வது நாளாக கவுன்சிலர்கள் கேட்டை பூட்டி போராட்டம்


நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தை இடமாற்ற எதிர்ப்பு: 3-வது நாளாக கவுன்சிலர்கள் கேட்டை பூட்டி போராட்டம்
x

நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக கவுன்சிலர்கள் கேட்டை பூட்டி போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

குழித்துறை,

நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக கவுன்சிலர்கள் கேட்டை பூட்டி போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நீடிப்பு

மார்த்தாண்டம் அருகே குழித்துறை ரெயில் நிலையம் அருகே நல்லூர் பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த பேரூராட்சி அலுவலகம் பழமை வாய்ந்ததாக காணப்படுவதால் அதற்கு பதிலாக புதிய அலுவலகம் கட்டுவதற்கு அரசு சார்பில் ரூ.1 கோடியே 22 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பேரூராட்சி அலுவலகத்தை நல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட முள்ளஞ்சேரி பகுதிக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் 3-வது நாளாக நீடித்தது.

மேலும் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள கேட்டை பூட்டி உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசன் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா விரைந்து வந்து போராட்டக்காரர்களிடமும், பேரூராட்சி நிர்வாக அலுவலர் கணேசனிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் போராட்டக்காரர்கள், பேரூராட்சி அலுவலகத்தை முள்ளஞ்சேரிக்கு இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும், அதை மினிட் புத்தகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும், மாற்று இடத்தை தேர்வு செய்ய பேரூராட்சி கூட்டம் கூட்டி ஆலோசித்து முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் பேரூராட்சி உதவி இயக்குனருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். மேலும் நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தை முள்ளஞ்சேரி பகுதிக்கு மாற்றம் செய்வதாக எழுதப்பட்ட தீர்மானம் ரத்து செய்வதாகவும் மாற்று இடம் குறித்து விவாதிக்கும் வகையில் பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்டுவதாகவும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். மேலும் பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story