25 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த தம்பதி
குமரி மாவட்டத்தில் வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி 25 பேரிடம் ரூ.36 லட்சத்தை ஒரு தம்பதியினர் மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் ஏஜெண்டு வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குழித்துறை:
குமரி மாவட்டத்தில் வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி 25 பேரிடம் ரூ.36 லட்சத்தை ஒரு தம்பதியினர் மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் ஏஜெண்டு வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக...
சென்னை மண்ணடியில் ஒரு தம்பதியினர் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி ஒரு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். அவர்களது ஏஜெண்டாக மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டில் தோட்ட வேலைக்கு ஆட்கள் தேவை என்று திக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஏஜெண்டு வழியாக கேள்விப்பட்ட களியக்காவிளை எல்லை பகுதியில் உள்ள ஒரே பகுதியை சேர்ந்த 25 பேர் அந்த ஏஜெண்டிடம் தொடர்பு கொண்டுள்ளனர்.
அப்போது அந்த ஏஜெண்டு நியூசிலாந்துக்கு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று முதலில் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து தலா ரூ.50 ஆயிரம் வீதம் அந்த நபரிடம் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றனர்.
பணம் மோசடி
ஆனால் சில ஆண்டுகள் கடந்த பின்னரும் பணம் கொடுத்தவர்களுக்கு வெளிநாட்டுக்கு செல்வதற்குரிய எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே அவர்கள் ஏஜெண்டிடம் அது குறித்து கேட்டபோது, நியூசிலாந்து நாட்டில் தற்போது ஆட்கள் தேவையில்லை என்றும் அதே வேலை அமெரிக்காவில் உள்ளதாகவும் அதற்கான விசா தங்கள் கைவசம் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அதற்கு கூடுதலாக பணம் செலவாகும் என்றும் உடனே பணம் செலுத்தி மருத்துவ பரிசோதனை முடித்தால் ஒரு வாரத்தில் அமெரிக்கா செல்லலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதை நம்பிய அந்த 25 பேரும் தலா ரூ.60 ஆயிரத்துடன் சென்னை சென்று அங்குள்ள தம்பதியரிடம் பணத்தை கொடுத்து மருத்துவ சான்றிதழ் பெற்றுள்ளனர். பின்னர் மீண்டும் தலா ரூ.50 ஆயிரம் செலுத்தினால் உடனே அமெரிக்கா செல்லலாம் என கூற அதையும் நம்பி, அந்த பணத்தை கொடுத்ததுடன் 15 நாட்கள் சென்னையில் தங்கியிருந்தனர்.
வீடு முற்றுகை
அதன் பின்னர் அந்த தம்பதியினரும், ஏஜெண்டும், அவர்களிடம் 2 நாட்களில் வெளிநாடு செல்வதற்குரிய டிக்கெட் வந்து விடும் என்று கூறி ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதை தொடர்ந்து வெளிநாடு செல்லலாம் என்ற நம்பிக்கையுடன் ஊருக்கு திரும்பிய அவர்கள் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தயாராக இருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
பின்னர் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் சென்னையில் உள்ள டிராவல்ஸ் அலுவலகமும் பூட்டி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த 25 பேரும் அந்த பகுதியில் விசாரித்த போது அவர்களுக்கு கிடைத்த பதில் பேரதிர்ச்சியாக இருந்தது.
இதுபோன்று பலரை அந்த தம்பதியினர் ஏமாற்றி பணம் பறித்த தகவல் தெரிய வந்தது.
பிறகு 25 பேரும் குமரி மாவட்டம் வந்து மாவட்ட போலீசாருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர். ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் திக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஏஜெண்டு வீட்டை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரபரப்பு
உடனே மார்த்தாண்டம் போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சென்னை தம்பதியை தொடர்பு கொண்டு போலீசார் பேசிய போது, பணத்தை மறுநாள் திருப்பிக் கொடுப்பதாக கூறி செல்போனை துண்டித்துள்ளனர். பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஒரே பகுதியை சேர்ந்த 25 பேரிடம் அமெரிக்காவுக்கு அனுப்புவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.