மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தி தம்பதி தீ குளிக்க முயற்சி
பாலியல் தொல்லை கொடுப்பவர் மீது போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலியல் தொல்லை கொடுப்பவர் மீது போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
குறை தீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார். கூட்டத்தில் வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, வீடுகள் வேண்டி, பொது பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் கொடுத்தனர்.
மொத்தம் 193 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
தீக்குளிக்க முயற்சி
கலவையை அடுத்த கன்னிகா புரத்தைச் சேர்ந்த இந்திரா (வயது 32) - சுப்பிரமணி தம்பதியினர் கையில் மண்எண்ணெய் கேனுடன் வந்தனர். இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து கேனை பறிமுதல் செய்ய முயன்றனர். அதற்குள் அவர்கள் தங்கள் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றிக் கொண்டனர்.
உடனடியாக போலீசார் கேனை கைப்பற்றி, அவர்களின் உடலில் தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவர்களிடம் விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்திராவிற்கு பாலியல் தொந்தரவு, கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும், இது தொடர்பாக வாழைப்பந்தல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை விசாரணைக்காக ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடை
நந்தியாலம்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் மேல்விஷாரம் அடுத்த நந்தியாலத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி டாஸ்மார்க் கடை செயல்படுகிறது. கடையின் அருகில் மது அருந்திவிட்டு, தகராறில் ஈடுபடுகின்றனர். மேலும் அங்கு திருட்டு சம்பவங்களும் நடக்கிறது. பெண்கள் அவ்வழியாகச் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், துணை ஆட்சியர் (கலால்) சத்திய பிரசாத், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.