போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயன்ற தம்பதி


போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயன்ற தம்பதி
x
தினத்தந்தி 12 Dec 2022 11:22 PM IST (Updated: 13 Dec 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததால் போலீசாரை கண்டித்து திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததால் போலீசாரை கண்டித்து திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறை தீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தார். கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 472 பொது நல மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அதில் தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது அடுத்த ஒரு வாரத்தில் தீர்வு காணவும் அரசு அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ராஜாபெருமாள் கொடுத்த மனுவில், ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூங்குளம் ஊராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக பூங்குளம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

கலெக்டர் முன் தர்ணா

ஜோலார்பேட்டை ஒன்றியம், பக்கிரி தக்கா அம்மையப்பன் நகரைச் சேர்ந்த ஆஞ்சி என்பவர் மனு அளிக்க வந்தார். அவர் திடீரென கலெக்டர் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை அங்கிருந்த அரசு அலுவலர்கள், போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது, அவர் தனக்கு சொந்தமான காலி மனையை அளந்து அதற்கான தனி பட்டா வழங்க திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் பட்டா வழங்கவில்லை என கூறினார். அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதே போல் இருனாப்பட்டு அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி திருப்பதி (வயது 38), இவரது மனைவி பூரணிமா (35) ஆகிய இருவரும் மக்கள் குறை தீர்வு கூட்டத்துக்கு மனுவுடன் வந்தனர். இவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சோதனை செய்தனர்.

தீக்குளிக்க முயற்சி

அப்போது அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தங்கள் மீது மண் எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அவரிடம், திருப்பதி கூறுகையில், 17 வயதுள்ள என் மகளை, எனது உறவினர் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடத்தி சென்றார். இது குறித்து குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் எனது புகார் மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருகின்றனர்.

இதனால், மனமுடைந்த நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தோம் என்றார். இதையடுத்து, அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்தசம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நலத்திட்ட உதவி

இதைதொடர்ந்து மரணமடைந்தது 6 மாற்றுத்திறனாளிகளின் வாரிசு தாரர்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் சார்பில் ஈமச்சடங்கிற்காக ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான காசோலை மற்றும் 10 மாற்றுத்திறனாளிகளுக்குகு ரூ.70 ஆயிரம் மதிப்பிலான தையல்எந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கோவிந்தன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், கலால் உதவி ஆணையர் பானு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story