சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க ராணிப்பேட்டை நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்


சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க ராணிப்பேட்டை நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
x

ராணிப்பேட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நகராட்சி கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-

ராஜலட்சுமி:- ரூ.கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலைகள் தரமற்றதாக உள்ளன. மேலும் பயன்பாடு இல்லாத இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு எந்தவித நன்மையும் கிடையாது.

பொறியாளர்:- இது குறித்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனந்தன்:- ஆற்காடு பஸ் நிலையம் இடிக்கப்படுவதாக புரளி கிளப்புகிறார்கள். இதனால் பஸ் நிலையத்தில் கடை நடத்துபவர்கள் அச்சப்படுகிறார்கள். அவர்களுக்கு கடன் கொடுக்கவும் தயங்குகிறார்கள். இதனை நகராட்சி நிர்வாகம் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

செல்வம்(பா.ம.க.):- 8 வார்டுகளுக்கு ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எந்த வேலையும் செய்யவில்லை. எனது வார்டில் உள்ள நகராட்சி பள்ளிக்கு தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். அங்கன்வாடி மையத்திற்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

மாடுகளை பிடிக்க வேண்டும்

ஏ.என்.செல்வம்:- தோப்புக்கான பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையற்ற பொருட்களை வைத்துள்ளனர். ஒரு சுகாதார மருத்துவமனை சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது.

லோகேஷ்:- ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. நகரில் உள்ள சாலைகள் நடைபாதை அற்ற சாலைகளாக உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

சுகாதார ஆய்வாளர்:- கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாவை:- நகரில் பல இடங்களில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. பொதுமக்கள் சாலையில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர் சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும்.

அனு:- ஆற்காடு பஸ் நிலையத்தில் உள்ள அம்மா மருந்தகம் விரிவாக்கம் செய்யப்பட்டு கூடுதல் இடத்தில் நடத்தி வருகின்றனர் அவர்களிடம் இருந்து அதிகப்படியான வாடகை வசூல் செய்யப்படுகிறதா

தலைவர்:- அதிகப்படியான வாடகை செலுத்த கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்

பாஞ்சாலி:- தோப்புக்கான வடக்குப்பள்ளியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. உடனடியாக செய்து தர வேண்டும்

காமாட்சி:- எனது வார்டில் மின் கம்பங்கள் சரியில்லை. தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை, பன்றித் தொல்லை, கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது.

பொறியாளர்:- புதிய மின் கம்பங்கள் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. பன்றி பிடிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது. பொன். ராஜசேகர், தட்சிணாமூர்த்தி ஆகியோரும் பேசினர்.

நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story