விவசாயிக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை ரூ.97 ஆயிரம் வழங்க வேண்டும்
விவசாயிக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை ரூ.97 ஆயிரம் வழங்க வேண்டும்
விவசாயிக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை ரூ.97 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பயிர்காப்பீடு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டம் கழுவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம். விவசாயியான இவர் தில்லைவிளாகம் கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் 2021-22 ஆண்டில் நெல் பயிர் காப்பீடு செய்திருந்தார். பயிர் காப்பீடு செய்து இருந்த நிலையில் கனமழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
இந்தநிலையில் அரசின் நிபுணர் குழு பயிர் சேதங்களை ஆய்வு செய்து, தில்லைவிளாகம் கிராமத்துக்கு 60 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என அறிவித்தது. ஆனால் பாலசுந்தரத்திற்கு மட்டும் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை கிடைக்கவில்லை.
ரூ.97 ஆயிரம் இழப்பீடு
இதுகுறித்து அவர் அதிகாரிகளுக்கு உரிய மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பாலசுந்தரம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை குறைதீர் ஆணையத்தின் தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் லட்சுமணன், பாக்கியலட்சுமி ஆகியோர் கொண்ட அமர்வு உரிய விசாரணை நடத்தி தீர்ப்பு அளித்தது. திருவாரூர் மாவட்ட கலெக்டர், தில்லைவிளாகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் பயிர் காப்பீட்டு நிறுவனம் ஆகியோர் சேர்ந்தோ அல்லது தனித்தோ பயிர் காப்பீடு இழப்பீடு தொகையாக ரூ.67 ஆயிரம், மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் என ரூ.97 ஆயிரத்தை பாலசுந்தரத்துக்கு வழங்க வேண்டும். இந்த இழப்பீடு தொகையை 6 வாரத்திற்குள் வழங்காவிட்டால் ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியை சேர்த்து வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்தனர்.