மாமியாரின் நகையை பறித்த பெண்ணை மடக்கி பிடித்த மருமகள்
ஓடும் பஸ்சில் மாமியாரிடம் நகையை பறித்து விட்டு தப்பி ஓடிய பெண்ணை மருமகள் மடக்கி பிடித்தார்.
குழித்துறை:
ஓடும் பஸ்சில் மாமியாரிடம் நகையை பறித்து விட்டு தப்பி ஓடிய பெண்ணை மருமகள் மடக்கி பிடித்தார்.
மார்த்தாண்டத்தில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஓடும் பஸ்சில்...
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள குருசடி விளாகத்தை சேர்ந்தவர் கிப்சன் (வயது 35), தொழிலாளி. இவருடைய மனைவி மேரி ஷைனி (32). கிப்சனின் தாயார் டெல்பிக்கு (65) உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.
இதனால் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஸ்கேன் எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி டெல்பி மார்த்தாண்டம் செல்வதற்காக வள்ளவிளையில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் பஸ்சில் ஏறினார். அவருக்கு துணையாக மருமகள் மேரி ஷைனியும் சென்றார்.
பஸ்சின் ஒரே இருக்கையில் மாமியாரும், மருமகளும் அடுத்தடுத்து உட்கார்ந்திருந்தனர். குழித்துறையை கடந்து சென்ற பஸ் வெட்டுமணி நிறுத்தத்தில் நிற்க முயன்றது.
நகை பறித்த பெண்
அந்த சமயத்தில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண் திடீரென டெல்பியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் கைவரிசை காட்டிய அந்த பெண் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த டெல்பி மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் திருடி... திருடி... என சத்தம் போட்டனர்.
அந்த சமயத்தில் சுதாரித்துக் கொண்ட டெல்பியின் மருமகள் மேரிஷைனி, நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய பெண்ணை பின்னாலேயே துரத்தினார்.
மருமகள் மடக்கி பிடித்தார்
சிறிது தொலைவில் அந்த பெண்ணை மேரி ஷைனி மடக்கி பிடித்தார். இதற்கிடையே அங்கு பொதுமக்களும் திரண்டனர். அப்போது மேரி ஷைனியின் துணிச்சலை அனைவரும் பாராட்டினர். பின்னர் பிடிபட்ட பெண்ணை மார்த்தாண்டம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், நகை பறித்த பெண் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பள்ளக்காபாளையம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த பகவதி என்பவரது மனைவி பவானி (39) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பவானி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2½ பவுன் நகையும் மீட்கப்பட்டது. கைதான பவானிக்கு வேறு ஏதேனும் திருட்டு வழக்குகளில் தொடர்பு உண்டா? என தொடர்ந்து விசாரணை நடக்கிறது. ஓடும் பஸ்சில் மாமியாரிடம் நகையை பறித்து விட்டு தப்பிய பெண்ணை மருமகள் மடக்கி பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.