பலியான 2 பக்தர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
தக்கலை அருகே பலியான 2 பக்தர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து நடந்தது. எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தக்கலை,
தக்கலை அருகே பலியான 2 பக்தர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து நடந்தது. எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 பக்தர்கள் பலி
குமரி மாவட்டத்தில் சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் 2 நாட்கள் நடந்தது. இதில் கலந்து கொண்டு சிவாலயங்களை தரிசனம் செய்வதற்காக கேரள மாநிலம் விழிஞ்ஞம் அருகில் உள்ள முல்லூர் பீச் கேட்டுக்கோணம் பகுதியை சேர்ந்த ராஜூ (வயது 54), ராஜன் (55) உள்பட 8 பேர் 4 மோட்டார் சைக்கிள்களில் நேற்று முன்தினம் வந்தனர்.
இதில் ராஜூம், ராஜனும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ராஜூ ஓட்டினார். திருவிதாங்கோடு மகாதேவர்கோவிலுக்கு செல்ல தக்கலை அருகே புலியூர் குறிச்சியை கடந்து கொல்லன்விளை வள்ளியாற்று பாலம் அருகில் சென்ற போது ராஜூவின் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றதில் இருவரும் கீழே விழுந்து தலையில் படுகாயம்அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
விபத்து குறித்து அறிந்ததும், தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று பிரேத பரிசோதனைக்கு பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து எப்படி நடந்தது என்பதை கண்டறிய போலீசார் விபத்து நடந்த பகுதியில் உள்ள நிறுவனங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர் அப்போது சாலையில் கிடந்தவர்களின் அருகில் லோடு ஆட்டோவும், ஒரு காரும் நின்றது. ஆனால் அந்த வாகனங்கள் மோதியது போன்ற காட்சிகள் தெளிவாக இல்லாததால் விபத்து எப்படி நடந்தது என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விபத்து நடந்தது எப்படி? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.