பண்ருட்டியில்பூட்டிய வீட்டில் ஓட்டல் தொழிலாளி பிணம்போலீசார் விசாரணை
பண்ருட்டியில் பூட்டிய வீட்டில் ஓட்டல் தொழிலாளி பிணமாக கிடந்தாா். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி,
பண்ருட்டி போலீஸ் லைன் 4-வது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதியில் வசித்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு அழுகிய நிலையில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
விசாரணையில் அவர் பண்ருட்டி எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 58) என்பதும், இவரது மனைவி இறந்த பிறகு கடந்த 5 ஆண்டுகளாக போலீஸ் லைன் 4-வது தெருவில் வாடகை வீட்டில் தங்கி இருந்ததும், ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
உடல் நலக்குறைவால் சுப்பிரமணியன் பாதிக்கப்பட்டு, இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.