தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் என்ஜினீயர்


தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் என்ஜினீயர்
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறை அருகே ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் என்ஜினீயர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குழித்துறை அருகே ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் என்ஜினீயர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

தண்டவாளத்தில் பிணம்

குழித்துறை ரெயில் நிலையம் அருகே கடந்த 31-ந் தேதி ரெயில் தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணம் காயங்களுடன் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

என்ஜினீயர்

இந்தநிலையில் பிணமாக கிடந்தவர் மதுரை மாவட்டம் காஞ்சிரம்பேட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 25) என்பதும், அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. என்ஜினீயரான பாலகிருஷ்ணன் பட்டய கணக்கியலும் படித்துள்ளார்.

படிப்பு முடிந்ததும் இவர் பல்வேறு இடங்களில் வேலை தேடியுள்ளார். ஆனால் வேலை எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக கோவையில் வேலை தொடர்பாக நேர்முகத் தேர்வுக்கு சென்றும் பயனில்லாமல் போனது. இதனால் பாலகிருஷ்ணன் மிகவும் மன உளைச்சலில் காணப்பட்டார். பாலகிருஷ்ணனின் தந்தை டீக்கடை நடத்தி வருகிறார். இந்த டீக்கடையில் தந்தைக்கு உதவியாக பாலகிருஷ்ணன் அவ்வப்போது வேலை செய்து வந்தார்.

வேலை கிடைக்காத விரக்தி

ஏற்கனவே விரக்தியில் இருந்த பாலகிருஷ்ணன் டீக்கடைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். ஆனால் அவர் டீக்கடைக்கு செல்லவில்லை. இரவும் வீட்டுக்கும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை தேடி வந்தனர்.

இதற்கிடையே அவர் மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் வந்தார். பின்னர் அங்கிருந்து களியக்காவிளை செல்லும் பஸ்சில் ஏறி குழித்துறையில் இறங்கிய அவர் நேராக ரெயில் தண்டவாள பகுதிக்கு சென்று அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். வேலை கிடைக்காத விரக்தியில் அவர் உயிரை மாய்த்துக் கொண்ட உருக்கமான தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

இதற்கிடையே பாலகிருஷ்ணனின் பெற்றோர் நேற்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து தன் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. பின்னர் பாலகிருஷ்ணனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story