மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

அடுத்த மாதம் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மின் கட்டணத்தை உயர்த்த முடிவு

தமிழ்நாட்டில் நுகர்வோர் விலைக்குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பதால், அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. 10 மாதங்களில் மீண்டும் ஒரு மின்கட்டண உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

ஏற்கனவே உயர்த்தப்பட்ட மின்சார கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சொல்லி மாளாது. மின்சார கட்டண உயர்வை தாங்கிக்கொள்ள முடியாமல் ஏராளமான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன.

பொருளாதார நெருக்கடி

அதேபோல், விசைத்தறி உரிமையாளர்களும் மின் கட்டண உயர்வின் தாக்கங்களை தாங்க முடியாமல் தொழிலை விட்டு வெளியேறிவிட்டனர். சிறு வணிகர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் பெரும்பகுதி மின் கட்டணம் செலுத்துவதற்கே செலவாகி விடுகிறது.

இத்தகைய சூழலில் மின்சார கட்டணம் மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டால், வணிகர்கள், சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொள்வார்கள்.

அரசு நடவடிக்கை

தமிழ்நாட்டின் வரலாற்றில் 10 மாதங்களில் 2-வது முறையாக மின்சார கட்டணத்தை உயர்த்துவது இதுவரை நிகழ்ந்ததில்லை. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு, இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை, அவற்றால் அத்தியாவசிய பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றால் தமிழக மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், இன்னொரு சுமையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது.

எனவே, மின்சார கட்டணத்தை ஜூலை மாதம் முதல் உயர்த்தும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி 2026-2027-ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணையை செயல்படுத்துவதில் இருந்தும் விலக்கு பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story