உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும்
உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும் என கீழையூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.
வேளாங்கண்ணி:
உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும் என கீழையூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.
ஒன்றியக்குழு கூட்டம்
கீழையூர் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாத்திஆரோக்கியமேரி, வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-
செல்வம்(இ.கம்யூ):- ஆதிதிராவிடர்கள் குடியிருப்பு அதிகம் உள்ள இடங்களில் சுடுகாட்டு சாலை அமைத்து தர வேண்டும்.
கமலா(அ.தி.மு.க):- தற்போது சிந்தாமணியில் இருந்து காரப்பிடாகை வரையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் செல்லக்கூடிய குடிநீர் குழாய்கள் சேதமடைந்து விட்டன. மீண்டும் புதிய குடிநீர் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுமுகம்(பா.ஜ.க.):- பிரதாபராமபுரம் பகுதிகளில் மாங்காய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. ஆனால் மாங்காய்களில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு மாங்காய்கள் அழுகி கீழே கொட்டி விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநடப்பு செய்யப்படும்
சுதா:(தி.மு.க):- திருக்குவளை சமத்துவபுரத்தில் உள்ள சமுதாய கூடத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள குளங்களில் படித்துறை சேதமடைந்து காணப்படுகிறது. புதிய படித்துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லென்சோயா(தி.மு.க):- சேதமடைந்த பாலகுறிச்சி- இறையான்குடி சாலையை சீரமைக்க வேண்டும்.
சுப்பிரமணியன்(அ.தி.மு.க): கீைழயூர் அருகே தெற்குவெளி பகுதிகளில் ஆதிதிராவிடர்கள் குடியிருப்பு பகுதிகளில் சுடுகாட்டு சாலை அமைத்து தர வேண்டும். மாதந்தோறும் நடக்கும் ஒன்றியக்குழு கூட்டத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், ஒரு சில அதிகாரிகளை தவிர மற்ற துறை அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை. இதனால் துறை சார்ந்த குறைகளை உறுப்பினர்கள் தெரிவிக்க முடிவதில்லை. இனிவரும் கூட்டங்களில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை என்றால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்யப்படும்.
ஏழிசைவல்லபி:-(அ.தி.மு.க): விழுந்தமாவடி சவுந்தரராஜ பெருமாள் கோவில் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும்.
நிறைவேற்றப்படும்
நாகரெத்தினம்(தி.மு.க):- வேட்டைக்காரனிருப்பு பகுதியில் பழைய போலீஸ் நிலைய ரோட்டில் இருந்து கடற்கரை வரை செல்லக்கூடிய சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். ஒன்றியக்குழு தலைவர்(செல்வராணி ஞானசேகரன்):- உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர்கள் பேசினர்.