நிதி நிலைக்கு ஏற்ப உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
நிதி நிலைக்கு ஏற்ப உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.
சீர்காழி:
நிதி நிலைக்கு ஏற்ப உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஆணையர்கள் இளங்கோவன், அருள்மொழி, துணைத்தலைவர் உஷா நந்தினி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-.
வெளிப்படை தன்மை இல்லை
நடராஜன் (அ.தி.மு.க):- சீர்காழி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லை..ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ரூ.5 லட்சத்திற்கான வளர்ச்சிப் பணிகள் தேர்வு செய்து தருமாறு கூறுனீர்கள். ஆனால் இதுநாள் வரை டெண்டர் வைக்கவில்லை.
அறிவழகன் (சுயேச்சை) :- நான் தொடர்ந்து மூன்று கூட்டங்களில் ஊராட்சி ஒன்றிய வரவு, செலவு கணக்குகளை கேட்டு வருகிறேன் ஆனால் இது வரை அதிகாரிகள் பதில் சொல்லவில்லை. ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லை.
வளர்ச்சி பணிகள்
விஜயகுமார் (அ.தி.மு.க):-ஊராட்சி ஒன்றியத்தில் வரவு எவ்வளவு என்ற தகவலை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளாததால் பொதுமக்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்களை மதிப்பதே கிடையாது.
தென்னரசு (தி.மு.க):-எடக்குடி வடபாதி ஊராட்சிக்குட்பட்ட கீழவெளியில் சேதமடைந்த சாலைகளை மழைக்காலத்திற்கு முன்பு சீரமைக்க வேண்டும்.
ரிமா (அ.தி.மு.க):-அகணி ஊராட்சிக்குட்பட்ட மன்னன் கோவில் கிராமத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நியாய விலை கடைக்கு புதிய நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும் என தொடர்ந்து ேகாரிக்கை விடுத்து வருகிறேன்.ஆனால் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும எடுக்கவில்லை.
வரவு, செலவு கணக்குகள்
ஆனந்தி (அ.தி.மு.க):-திருப்புங்கூர், கற்கோவில் ஆகிய ஊராட்சியில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் விவரங்களை தெரியப்படுத்த வேண்டும்.
துணைத் தலைவர்:- ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசு அதிகாரிகள் முறையாக பதில் அளிக்க வேண்டும். உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று வரவு, செலவு கணக்குகளை முறையாக தெரியப்படுத்த வேண்டும்.
ஆணையர்:-தற்போது உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் வருகிற 15-ந் தேதி வரை வளர்ச்சிப் பணிகள் டெண்டர் வைக்க முடியாது. இதனால்தான் ஒன்றிய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் டெண்டர் வைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
தலைவர்:- நிதி நிலைக்கு ஏற்ப உறுப்பினர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இதற்கு அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், பணி மேற்பார்வையாளர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்துத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் சுலோச்சனா நன்றி கூறினார்.