துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்


துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
x

மாணவர்களுக்கு தினந்தோறும் வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் கூறினார்.

திருவண்ணாமலை


மாணவர்களுக்கு தினந்தோறும் வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் கூறினார்.

ஈராண்டாய்வு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 2018-2019 மற்றும் 2020-2021-ம் ஆண்டுக்கான ஈராண்டாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான எஸ்.கே.பிரபாகர் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழ்நாடு முதல்- அமைச்சர் அனைத்து மாவட்டங்களிலும் 1-ம் முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.

ஆய்வு செய்ய வேண்டும்

எனவே மாணவர்களுக்கு தினந்தோறும் காலை உணவு திட்டம் அட்டவணைப்படி வழங்கப்படுகிறதா, சுகாதாரமான முறையில் உணவுகள் தயார் செய்யப்படுகிறதா என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல் குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று தொடங்கி வைக்க உள்ளார்.

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு விவரங்கள் குறித்த அனைத்து துறைகளில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒத்திகை நிகழ்ச்சி

பின்னர் அவர் கலெக்டர் அலுவலகம் மற்றும் கூடுதல் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் உள்ள வருவாய்த்துறையின் பதிவறை, அனைத்து பொதுப் பிரிவுகள் மற்றும் வளர்ச்சி பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களின் அலுவலக தூய்மை மற்றும் அலுவலக செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டார்.

முன்னதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு அவசர காலங்களில் பாதுகாப்பு முறைகளை கையாளுவது குறித்து ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றை நட்டார்.

மேலும் பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் ரூ.12 கோடியே 17 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மக்கள் குறைதீர்வு கூட்டரங்கம் மற்றும் இதர அலுவலக கட்டிடங்கள் அடங்கிய கட்டுமான பணியினையும் அவர் பார்வையிட்டார்.

அப்போது மாவட்ட கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்பட துறை உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story