சார்பதிவாளர் அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும்
சார்பதிவாளர் அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும்
வாய்மேடு:
தலைஞாயிறில் மூடப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தினர்.
சார்பதிவாளர் அலுவலகம் மூடப்பட்டது
நாகை மாவட்டம் தலைஞாயிறில் 1982-ம் ஆண்டு சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் தலைஞாயிறு அக்ரகாரம், தலைஞாயிறு 1 முதல் 5 சேத்திகள், திருமாளம், காடந்தேத்தி, மணக்குடி, வடுகூர், புத்தூர், முத்தரசபுரம், கோவில்பத்து வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 17 கிராமங்களை சேர்ந்தவர்கள் பத்திர பதிவுகளை செய்து வந்தனர். கடந்த 2003-ம் ஆண்டு தலைஞாயிறு சார்பதிவாளர் அலுவலகம் மூடப்பட்டது.
இதனால் தலைஞாயிறு அக்ரகாரம், தலைஞாயிறு 1 முதல் 5 சேத்திகள், திருமாளம், பிரிஞ்சிமூலை, நத்தப்பள்ளம் உள்ளிட்ட 10 கிராமங்கள் திருப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. மேலும் காடந்தேத்தி, மணக்குடி, வடுவூர், ஆய்மூர், நீர்முளை உள்ளிட்ட 7 கிராமங்கள் திருத்துறைப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது.
அலைய வேண்டிய சூழ்நிலை
இதனால் தலைஞாயிறு கிராமத்தில் உள்ளவர்கள் வில்லங்க சான்று, பத்திர நகல் எடுக்க மற்றும் பிறப்பு, இறப்பு, பதிவு செய்ய திருத்துறைப்பூண்டி, திருப்பூண்டி என மாறி மாறி அலைய வேண்டி உள்ளது. இந்தநிலையில் 10 கிராமங்களை திருப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து பிரித்து வேதாரண்யம் அல்லது தகட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் தலைஞாயிறு பகுதி பொதுமக்கள் தலைஞாயிறில் இருந்து பத்திர பதிவு செய்ய திருப்பூண்டிக்கு 9 கிலோ மீட்டர் தூரமும், வேதாரண்யத்திற்கு 28 கிலோ மீட்டர் தூரமும், தகட்டுரூக்கு 33 கிலோ மீட்டர் தூரமும் அலைய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மீண்டும் திறக்க வேண்டும்
தலைஞாயிறில் 19 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே தலைஞாயிறில் மூடப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி மற்றும் கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.