"நாம் கடைப்பிடிக்கும் தர்மம் நமக்கு பெருமைகளை கொண்டுவரும்'' தெலுங்கானா முதல்-மந்திரி பேச்சு


நாம் கடைப்பிடிக்கும் தர்மம் நமக்கு பெருமைகளை கொண்டுவரும் தெலுங்கானா முதல்-மந்திரி பேச்சு
x

பிராமணர்களுக்கு உதவிடும் புதிய அமைப்பை அறிமுகம் செய்து வைத்த தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், நாம் கடைப்பிடிக்கும் தர்மம் நமக்கு பெருமைகள், சாதனைகளை கொண்டு வரும் என்று பேசினார்.

சென்னை,

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் ஏழை-எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் விப்ராஹித பிரமாண சதன் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன் தொடக்க விழாவில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கலந்து கொண்டார். அப்போது அவர் சில திட்டங்களையும் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

நாம் கடைப்பிடிக்கக் கூடிய தர்மம் வரும் நாட்களில் நமக்கு பெருமைகளையும், சாதனைகளையும் கொண்டு வரும். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பிராமணர்களின் வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றுவதில் தெலுங்கானா அரசு உறுதி பூண்டுள்ளது. பிரம்மஞானம் பிராமணத்துவத்துக்கு வழிவகுக்கும். பாரதீய தர்மத்தில் பிராமணத்துவம் என்பது அறிவார்ந்த சிறப்பு.

பிராமண நலத்திட்டங்கள்

இன்றைய சமுதாயத்தில் பிராமணர்களின் பங்கு விலைமதிப்பற்றது. லோக சமஸ்தா கோஷங்களை வாழ்வியல் நெறிமுறைகளாக எடுத்துக்கொண்ட பிராமணர்கள், இந்த சமுதாயம் தழைத்தோங்க முக்கிய பங்கு வகிக்கிறார்கள். நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானா மாநிலத்தில் விப்ரசதன் அமைக்கப்பட்டு இருக்கிறது.

மாநிலத்தில் சர்வஜனத்தை வலுப்படுத்துவதற்கான மாநில அரசின் கொள்கை வலுவாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. அதன் மூலமே பிராமண நலத்திட்டங்கள் வேரூன்ற தொடங்கி இருக்கிறது. பிராமண அமைப்பினால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 கோடியை அரசு ஒதுக்குகிறது. இதுதவிர வெளிநாட்டு உதவித்தொகையின் கீழ் மொத்தம் 780 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். கல்வி உதவித்தொகையாக ரூ.150 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தப்படும்

இதுமட்டுமல்லாமல் சூரியப்பேட்டை, கம்மம், மத்திரா மற்றும் பீச்சுப்பள்ளி ஆகிய இடங்களில் மேலும் 3 பிராமண பரிஷத் பவனங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் புதிய அறிவிப்புகளையும் இந்த நிகழ்வில் அறிவிக்கிறேன். அதன்படி, வேத பண்டிதர்களின் கவுரவ ஊதியம் ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தப்படும். வயது வரம்பு 65 ஆக குறைக்கப்படுகிறது.

இதேபோல், தூபதீப நைவேத்யா திட்டம் தற்போது மாநிலத்தில் 6 ஆயிரத்து 441 கோவில்களுக்கு விரிவுப்படுத்தப்படும். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மாணவர்களுக்கான கட்டணம் திருப்பி செலுத்தும் திட்டம் இப்போது பிராமண மாணவர்களுக்கும் செயல்படுத்தப்படும். வேத பள்ளிகளுக்கான மானியம் ஆண்டுக்கு ரூ.2 லட்சமாக நிர்ணயிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றவர்கள்...

இந்த நிகழ்ச்சியில் பிராமண பரிஷத் தலைவர் ரமணாச்சாரி, தலைமை செயலாளர் சாந்தி குமாரி ஆகியோரும் பங்கேற்று பேசினார்கள். மேலும் மந்திரி சபிதா இந்திரா ரெட்டி, முன்னாள் எம்.பி. கேப்டன் லட்சுமிகாந்தராவ், மேயர் விஜயலட்சுமி, எம்.எல்.ஏ.க்கள் அரிகேபுடி காந்தி, சதீஷ் வொதிதேலா, எம்.எல்.சி.க்கள் வாணிதேவி, தேசபதி ஸ்ரீனிவாஸ், தெலுங்கானா மாநில நீர்ப்பாசன மேம்பாட்டு கழக தலைவர் வேணுகோபாலாச்சாரி, முன்னாள் தலைமை செயலாளர் ராஜீவ் சர்மா, முன்னாள் டி.ஜி.பி.க்கள் அனுராக் சர்மா, அரவிந்தராவ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.


Next Story