'ஊராட்சி நிதியை எடுக்க பயன்படுத்தும் டிஜிட்டல் கார்டை மீட்டு தரவேண்டும்'


ஊராட்சி நிதியை எடுக்க பயன்படுத்தும் டிஜிட்டல் கார்டை மீட்டு தரவேண்டும்
x

‘ஊராட்சி நிதியை எடுக்க பயன்படுத்தும் டிஜிட்டல் கார்டை மீட்டு தரவேண்டும்’ என்று ஜம்புத்துரைகோட்டை ஊராட்சி துணைத்தலைவர் சிவராமன் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

திண்டுக்கல்

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர்.

அதன்படி நிலக்கோட்டை தாலுகா ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி துணைத் தலைவர் சிவராமன் மற்றும் 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், துணைத்தலைவரை மட்டும் கலெக்டரிடம் சென்று மனு கொடுக்க அனுமதித்தனர். அதையடுத்து ஊராட்சி துணைத்தலைவர் சிவராமன் கலெக்டரிடம் புகார் மனு கொடுததார்.

டிஜிட்டல் கார்டு

அந்த மனுவில், ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்காக ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை எடுக்க எனக்கு டிஜிட்டல் கார்டு வழங்கப்படும். ஆனால் அந்த கார்டு இதுவரை எனக்கு தரப்படவில்லை.

மாறாக, எனது பெயரில் உள்ள டிஜிட்டல் கார்டை பயன்படுத்தி ஊராட்சி நிதி எடுக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது டிஜிட்டல் கார்டையும் மீட்டு தரவேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

டாஸ்மாக் கடைகள் இடமாற்றம்

இதைத்தொடர்ந்து தே.மு.தி.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஜவகர், ஒன்றிய செயலாளர் கருத்தப்பாண்டி ஆகியோர் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் வத்தலக்குண்டு பஸ் நிலையம் பின்புறம் உள்ள 2 டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு வரும் மதுப்பிரியர்களால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அவற்றை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

தோல்கழிவுகளால் தண்ணீர் மாசு

இதேபோல் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட நிர்வாகி கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், திண்டுக்கல்லில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் குடகனாற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைகிறது. அதில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. எனவே குடகனாற்றில் தோல் கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 260 மனுக்கள் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


Next Story