கோவில், நகைக்கடைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் திண்டுக்கல் இரும்பு பெட்டகம்
கோவில், நகைக்கடைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திண்டுக்கல் இரும்பு பெட்டகம் திகழ்வதால் திருடர்களுக்கு சவாலாக உள்ளது.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பாரம்பரியம், சிறப்பு உண்டு. ஊரின் பெயரை கூறியதும் சிறப்புகள் நினைவில் நிழலாடும். அந்த வகையில் திண்டுக்கல் என்றதும், அனைவரின் நினைவுக்கும் சட்டென வருவது பூட்டு தான்.
திண்டுக்கல்
திண்டுக்கல் பூட்டுகள் கதவில் தொங்குவதை பார்த்தால், திருடர்கள் திரும்பி சென்று விடுவார்கள். கள்ளச்சாவி போட்டு திறக்க முடியாதது, திண்டுக்கல் பூட்டுகள் என்ற பெயர் உண்டு. திண்டுக்கல்லில் 90 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக பூட்டு தயாரிப்பு தொழில் நடக்கிறது.
இந்த பூட்டுக்கு அடுத்தப்படியாக பூட்டுடன் தொடர்புடைய மற்றொரு தொழில் என்றால், அது இரும்பு பெட்டகம் உற்பத்தி ஆகும். இந்த இரும்பு பெட்டக தொழில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. பூட்டு தொழில் வளர்ந்த போது இரும்பு பெட்டக தொழிலும் இணைந்தே வளர்ந்தது.
இரும்பு பெட்டகம்
திண்டுக்கல்லில் தயாராகும் பூட்டுகளை போன்றே இரும்பு பெட்டகமும் தரமாகவும், உறுதியாகவும் தயாரிக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் திண்டுக்கல்லுக்கு வந்து இரும்பு பெட்டகத்தை வாங்கி செல்கின்றனர்.
ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு திண்டுக்கல்லில் தயாராகும் இரும்பு பெட்டகம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் இரும்பு பெட்டக தயாரிப்பு தொழில் வேகமாக வளர்ந்தது. அந்த வகையில் திண்டுக்கல்லில் சிறிய, பெரிய நிறுவனங்கள் என 40-க்கும் மேற்பட்ட இரும்பு பெட்டக தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன.
கோவில்களுக்கு உண்டியல், பெட்டகம்
இரும்பு பெட்டகங்களை பொறுத்தவரை கோவில்கள், நகைக்கடைகள், அடகு கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அதிகஅளவில் வாங்கி செல்கின்றனர். அதற்கேற்ப வெவ்வேறு வடிவங்களில் இரும்பு பெட்டகங்கள் தயாரிக்கப்படுகின்றன. கோவில்களில் சாமி சிலைகள், சாமிக்கு அணிவிக்கப்படும் நகைகள், கவசங்களை வைக்கும் வசதியுடன் பெட்டகம் வடிவமைக்கப்படுகிறது.
அதேபோல் கோவில்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக இரும்பில் உறுதியான உண்டியல் வைக்கப்படும். இந்த உண்டியல்களும் திண்டுக்கல்லில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உண்டியல்களை பொறுத்தவரை குறைந்தபட்சம் ஒரு அடி உயரம் முதல் அதிகபட்சம் தேவைக்கு ஏற்ப தயாரித்து வழங்கப்படுகிறது.
நகை, அடகு கடைகள்
இதுதவிர இரும்பு பெட்டகம் முக்கிய தேவையாக இருப்பது நகைக்கடைகள், அடகு கடைகள் தான். நகைக்கடைகள் இருப்பு வைக்கும் நகைகள், அடகு கடைகளில் வாடிக்கையாளர்கள் அடகு வைக்கும் நகைகளை பாதுகாப்பாக வைப்பது மிகவும் அவசியம். இதற்கு வசதியாக திண்டுக்கல்லில் பிரத்யேக வடிவில் இரும்பு பெட்டகங்கள் தயாரிக்கப்படுகின்றன.
நகைகளை வைப்பதற்கு வசதியாக சிறிய அளவிலான ரேக்குகளை கொண்ட இரும்பு பெட்டகம் வடிவமைக்கப்படுகிறது. இதுதவிர வணிக நிறுவனங்கள் பணம் வைக்கவும், வீடுகளில் பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைக்கவும் பெட்டகம் வாங்குகின்றனர். இந்த பெட்டகங்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தயாரித்து கொடுக்கின்றனர்.
இதற்கிடையே இரும்பு பெட்டக தயாரிப்பில் இரும்பு தகடு, இரும்பு கம்பிகள் தான் முழுக்க, முழுக்க பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இரும்பின் விலை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருப்பதால் சிறிய நிறுவனங்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றன. திண்டுக்கல்லில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் இரும்பு பெட்டக தொழில், மேலும் வளர்ச்சி பெற அரசு சலுகைகள் வழங்க வேண்டும் என்பது இரும்பு பெட்டக தயாரிப்பாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
திருச்செந்தூர், திருப்பதி
திண்டுக்கல் நாகல்நகரில் 3-வது தலைமுறையாக இரும்பு பெட்டக தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிரசாத் கூறியதாவது:-
திண்டுக்கல்லில் தயாராகும் பெட்டகங்களில் பூட்டுகள், கதவு இணைப்பு ஆகியவை பெட்டகத்தின் உள்பகுதியில் இருக்கும். பெட்டகம் முழுவதும் கைகளால் வடிவமைத்து தயாரிக்கப்படுகிறது. மேலும் பெட்டகத்தில் பொருத்தப்படும் பூட்டையும் கைவேலைப்பாடுடன் தயாரிக்கிறோம்.
கள்ளச்சாவி தயாரித்து ஒருபோதும் திறக்க முடியாது. இதுதவிர உறுதியான இரும்பு தகடுகளை கொண்டு சில தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிப்பதால் வெல்டிங் மூலம் கூட எளிதில் பெட்டகத்தை உடைக்க முடியாது. இதை பாரம்பரியமாக கடைபிடிப்பதால், திண்டுக்கல்லில் தயாராகும் இரும்பு பெட்டகங்களுக்கு தனி மவுசு இருக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோவில், திருப்பதி ஏழுமலையான்கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரெங்கம் பெருமாள் கோவில், ஈரோடு சிவன் கோவில், திண்டுக்கல்லில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்பட பல கோவில்களுக்கு நாங்கள் உண்டியல், இரும்பு பெட்டகம் தயாரித்து கொடுத்து உள்ளோம்.
இரும்பு தகடின் விலை இருமடங்காக உயர்ந்து விட்ட போதிலும் தரத்தை குறைக்காமல் தயாரிப்பதால், தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் வாங்கி செல்கின்றனர். அதேநேரம் இரும்பு பெட்டக தொழிலில் பலர் ஈடுபடுவதால் போட்டி அதிகமாக இருக்கிறது. ஒருசிலர் கண்ணை கவரும் வண்ணங்களை பூசி, உறுதி இல்லாத பெட்டகத்தை தயாரித்து குறைந்த விலைக்கு விற்கின்றனர். எனவே மக்கள் நல்ல நிறுவனத்தை தேடி பிடித்து பெட்டகத்தை வாங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.